இறைவன் - பிரஹதீஸ்வரர், பெருவுடையார், இராசராசேச்சரமுடையார், தக்ஷிணாமேருவிடங்கர். இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி. தீர்த்தம் - சிவகங்கை. இத்திருக்கோயில் வழிபாடு மகுடாகமப்படி நடைபெறுகிறது. சிவகங்கைத் தீர்த்தத்தில் உள்ள “தளிக்குளம்” வைப்புத் தலமாகும். அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் தாண்டகத்துள் “தஞ்சைத் தளிக்குளத்தார்” என்று பாடுகிறார். சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம். கருவூர்த்தேவர் இப்பெருமான் மீது (திருவிசைப்பா) பதிகம் பாடியுள்ளார். முதலாம் இராசராசன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அஷ்டபந்தன மருந்து சார்த்தியபோது அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். அஃதறிந்த போகமுனிவர் மன்னனுக்குச் செய்தியனுப்ப, அதன்படி கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது வரலாறு. கருவூர்த்தேவரின் உருவச்சிலை கோயிலில் உள்ளது. கோயிலின் முதற்கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாயில் என்றும், இரண்டாம் கோபுர வாயிலுக்கு இராசராசன் வாயில் என்றும், தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்றும் பெயர். பரந்த நிலப்பரப்பில் விசாலமாக, ஓங்கி உயர்ந்துள்ள விமானம் தொலைவிலிருந்து பார்ப்போருக்கும் கலைக்காட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது. சுவாமி விமானம் 216 அடி உயரமுள்ளது - தக்ஷிணமேரு எனப்படும். மூலமூர்த்தியாகிய (சிவலிங்க) பிரகதீஸ்வரமூர்த்தி மிகப் பெரியது. நர்மதை தீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டதென்பர். முன்னால் அமைந்துள்ள மிகப்பெரிய நந்தி ஒரே கல்லில் அமைந்தது. 12 அடி உயரம் - 19 அடி நீளம் சுமார் 8 1/2 அடி அகலமுடையது. விமானத்தின் மேலிருக்கும் பிரமரந்திரத்தைச் சாரம் கட்டி ஏற்றியிருக்கும் அருமையை நினைத்தால் புல்லரிக்கிறது. சாரம் கட்டிய இடமே சாரப்பள்ளம் எனப்படுகிறது. |