பக்கம் எண் :

908 திருமுறைத்தலங்கள்


     சோழ மன்னர்க்குத் திருவாரூர்த் தியாகராசாவிடத்தில் அளவிறந்த
பற்றுண்டு. எனவே அவர்கள் இங்குள்ள சோமாஸ்கந்த மூர்த்தியை
தியாகராசாவாகவே எண்ணி, அதற்குரிய சிறப்புக்களைக் குறைவின்றிச் செய்து
போற்றி வழிபட்டனர். இம்மூர்த்தி “தஞ்சை விடங்கர்”, “தக்ஷிணமேரு
விடங்கர்” என்று போற்றப்படுகிறார்.

     இக்கோயிலில் உள்ள திருமேனிகளை இராசராசனும் அவன்
மனைவியர்களும், அவன் குலத்தவர்களும், அதிகாரிகளும் தந்தனர் என்பது
கல்வெட்டால் தெரிகிறது.

     கோயிலின் முதல் தளத்தின் உட்சுவர்களில் 108 வகை நடன
அமைப்புகளின் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள சிவதாண்டவம், திரிபுராந்தகர்,
சுப்பிரமணியர், விநாயகர், காளி முதலிய வண்ண ஓவியங்கள் கலைக்கு
விருந்தாகும் கவினுடையன.

     அம்பாள் கோயிலை எழுப்பியவன் ‘கோனேரின்மைகொண்டான்’.
எழுந்தருளுவித்த மூர்த்தத்திற்கு உலகமுழுதுடைய நாச்சியார் என்று பெயர்
சூட்டப்பட்டது. விநாயகர் திருமேனிகளை இராசராசன் பிரதிஷ்டை
செய்வித்தான். பிராகாரத்திலுள்ள சுப்பிரமணியர் கோயில், பிள்ளையார்
கோயில் பிற்காலத்தில், சரபோஜி மன்னரால் பழுது பார்க்கப்பட்டு முன்
மண்டபங்கள் கட்டப்பட்டன. நடராஜ மண்டபம் மிகவும் பிற்காலத்தியது.

     சதய விழா, கார்த்திகை விழா, பெரிய திருவிழா முதலியவை பண்டை
நாளில் நடைபெற்றன. பெரிய திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம்
‘ஆட்டைத் திருவிழா’ எனப்பட்டது. வைகாசியில் நடைபெற்ற இவ்விழாவில்
இராசராச நாடகம் நடிக்கப்பட்டது. இதை நடித்த சாந்திக்கூத்தன்
திருமுதுகுன்றனான விஜயராசேந்திர ஆசாரியனுக்கு இதற்காக 120 கலம் நெல்
தரப்பட்டது. சுவாமிக்கு சண்பக மொட்டு ஏல அரிசி இலாமிச்சை முதலியவை
ஊறவைத்த நன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பருப்பு நெய் தயிர்
அமுதுகள் நிவேதனமாகப் படைக்கப்பட்டன. சுவாமிக்கு முன்பு திருப்பதிகம்
விண்ணப்பிக்க நாற்பத்தெட்டு பிடாரர்களும், உடுக்கை வாசிக்க ஒருவரும்,
கொட்டு மத்தளம் முழக்க ஒருவரும் ஆக 50 பேர்களை இராசராசன்
நியமித்தான். இவர்களுடைய பெயர்கள் அனைத்தும் கல்வெட்டுக்களில்
குறிக்கப்பட்டுள்ளன. அப்பெயர்கள் அனைத்தும் அகோரசிவன், ஞானசிவன்,
தத்புருஷசிவன், பரமசிவன், ருத்ரசிவன், யோகசிவன், சதாசிவன் என்று
முடிவதால் இக்கோயிலில் தீட்சை பெற்றோரே திருப்பதிகம் விண்ணப்ப
நியமிக்கப்பட்டனர் என்ற செய்தி தெரிகிறது.