பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 909


     கோயிற் பணிகளுக்காகப் பல ஊர்களிலிருந்து கொண்டுவந்து 2 நீளத்
தெருக்களில் 400 நடனப் பெண்களைக் குடியமர்த்தினான் இராசராசன்.
இப்பெண்டிர் தளிச்சேரி பெண்டிர் என்றழைக்கப்படலாயினர். இவர்கள் வசித்த
தெரு தளிச்சேரி என்று வழங்கியது. இவர்களுக்குப் பட்டங்களும் அளித்துச்
சிறப்பு செய்யப்பட்டன. இவர்களுக்கு வீடு கட்டித் தந்து, ஆடல்
வல்லான் மரக்காலால் நெல் அளித்து இறைபணிகளுக்கு அமர்த்தியதாகத்
தெரிகிறது. இவ்வாறே கானபாடிகள், நட்டுவர், சங்குகாளம் ஊதுவோர்,
மாலைகள் கட்டித் தருவோர், விளக்கேற்றுவோர், பரிசாரகர்கள்,
மெய்க்காவலர்கள் முதலியோர்களையும் நியமித்தான். நிலநிவந்தங்கள் பல
தந்தான். அம்மன்னன் கோயிலுக்குத் தந்துள்ள ஆபரணங்களின்
பெயர்களைப் படித்தாலே பிரமித்துப் போகிறோம் - வியப்பும்
பேராச்சரியமும் அடைகிறோம். ஆனால் அவை ஒன்று கூட இன்றில்லாதது -
அதை விடமிகப் பெரிய ஆச்சரியமாகும். நினைத்தால் அடையும் மன
வேதனைக்கு அளவுமில்லை - மருந்துமில்லை.

     தன்னாற் கட்டப்பட்ட கோயிலுக்குத் தேவையென்பது ஏதுமில்லாதபடி -
சிறிதும் குறைவில்லாதபடி அனைத்தையும் செய்து வைத்தான் என்பதை
எண்ணுகிறபோது அம்மன்னனின் சமயப்பற்று, பரந்த இறைமனம், தெய்வ
வழிபாட்டில் இருந்த மட்டற்ற ஈடுபாடு தெரியவருகின்றது. இக்கருத்துக்கு
அரண்தரும் செய்தியாகப் பின்வரும் தொடர்கள் விளங்குகின்றன.

      “The Raja Rajewara Temple at Tanjore which has evidently
served as a model for a large number of other temples in South
India is a stupendous monument of the religious instruct of this
sovereign.”
                                        H. Krishna Sasthiri.

     கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் ஆடல்வல்லான், தக்ஷிண
மேருவிடங்கர் எனவும், பின்னர் இராசராசேச்சர முடையார், இராசராசேச்சர
முடைய பரமசுவாமி எனவும்; ஊர்ப்பெயர் பாண்டிகுலாசனி வளநாட்டி
தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மன்னன்
மட்டுமன்றி அவன் குடும்பத்தாரும், அலுவலர்களும் பற்பல நிவந்தங்களைக்
கோயிலுக்கு ஏற்படுத்தினர். அவையனைத்தும் கல்வெட்டுக்களில்
குறிக்கப்பட்டுள்ளன. மற்றும், நாடொறும் கோயிலில் ஏதேனும் நிகழ்ச்சிகள்
நடந்த வாறிருந்ததும், மக்கள் கண்டு மகிழ்ந்ததும் ; திருப்பதிகம்
விண்ணப்பித்தோர் கணக்காயர் மெய்க்காவலர் முதலியோர் பெயர்களும்கூடக்
கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.