பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 915


     திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.

     தற்போது முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றுள்ளது. மயிலாடு
துறையிலிருந்து தில்லையாடி சென்று (தில்லையாடி வள்ளியம்மை
வளைவுக்குள் நுழைந்து சென்று) அங்கிருந்து 3 கி.மீ. சென்றால்
திருவிடைக்கழி தலத்தையடையலாம். கோயில் வரை பேருந்து செல்லும்.
நல்ல சாலை, சுப்பிரமணியக் கடவுள் மூலத்தான மூர்த்தியாக விளங்குகிறார்.
இத்தலத்திற்கு மகிழவனம் என்ற பெயருண்டு.

     தெய்வயானை இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை
கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழிகழிந்ததாலும்
இத்தலம் விடைக்கழி என்னும் பெர் பெற்றதாகக் கூறுவர்.

     முசுகுந்தன், வசிட்டர், சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோர்
வழிபட்ட பதி. சேந்தனார் முத்தி பெற்ற தலம். திருமுறைகளில் இடம்
பெற்றுள்ள முருகன் தலம். சேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம்
பெற்ற தலம்.

     இறைவன் - காமேசுவரர்
     இறைவி - காமேசுவரி
     தலமரம் - குரா, மகிழம் (குராமரம் முருகப்பெருமானுக்கும் மகிழமரம்
              இறைவனுக்கும் தலமரங்களாம்)
     தீர்த்தம் - சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.

     அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி
இல்லை. மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூர்த்தியாக சுப்பிரமணியப்
பெருமானும் பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி
தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் தனித்தனி விமானங்கள். முருகனுடைய
விமானம் சற்ற உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும்
உள்ளது.

     தெய்வயானைக்குத் தனிச்சந்நிதி. அழகான ராஜகோபுரம் ஏழு
நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி தருகிறது.

     கை கூப்பித்தொழுது இடைச் சிந்தனையேதுமின்றி ‘விடை’ச்
சிந்தனையாக உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து
விநாயகரையும் தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் திருப்புகழ்ப் பாடல்கள்,
வேல் விருத்தம் முதலியவை பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன. வலப்பால்
தெய்வயானை சந்நிதி - தவக்கோல தரிசனம்.