பக்கம் எண் :

916 திருமுறைத்தலங்கள்


     பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. தலமரம் “குராமரம்” தழைத்துக் காட்சி
தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே
தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி
வளர்ந்துள்ளது. இதன் கீழமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.

     சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில்
இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது.
மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.

     எதிரில் தனிச்சந்நிதியாக திருக்காமேசுவரர் சிவலிங்க வடிவில் தரிசனம்
தருகிறார்.

     வலம் முடித்து உள்வாயிலைத் தாண்டி இடப்பால் சென்றால் சந்திரன்;
அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்கள் உள்ளன. உட்சுற்றில் நவசக்திகள்
தரிசனம். விநாயகரும் சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சிதர,
வழிபட்டவாறே நடந்தால் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர்
உற்சவமூர்த்தம் கண்டு தொழலாம்.

     சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர்,
குகச்சண்டேசுவரர் என்று (இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக)
பெயர்கள் சொல்லப்படுகின்றன. துர்க்கை, பைரவர், சூரியன் ஆகியோரைத்
தொழுதவாறே முன் மண்டபத்திற்கு வந்து இரு கணபதிகளையும் கைகூப்பி
வணங்கி படியேறிச் சென்றால் நேரே மூலவர் - சுப்பிரமணியக் கடவுள் காட்சி
தருகிறார்.

     நின்ற திருக்கோலம் அழகான வடிவம். பின்னால் இலிங்கமூர்த்தி
தரிசனம். எழில்ததும்ப மனங்கவரும் இளங்காளை - குராமரத்துக்குழகன் -
விடைக்கழி வித்தகனைத் தரிசித்த பின்பு, விட்டுப் பிரியவே மனம்
வரவில்லை. கம்பீரமாக நின்று காட்சிதரும் அருமையை அனுபவித்தாலன்றி
அளந்தறியவொண்ணாது.

     முருகனுக்கு முதன்மையருளித் தான் பின்னிருந்து காட்சி தரும்
காமேசுவரரைக் ‘கைகாள் கூப்பித்தொழீர்’ எனக் கட்டளையிட்டு உச்சி
மேற்குவித்து ; உள்ளம் நிற்க ; உடலாற் பிரிகிறோம். கல்வெட்டில்
முருகனுடைய பெயர் “திருக்குராத்துடையார்” என்று குறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்களிலிருந்து அங்கு பல மடங்கள் இருந்ததாகவும்,