பக்கம் எண் :

126

  அனைய தாயினு நன்றிலே னறநெறி திறம்பி
நினைவிற் செய்கையி லீட்டிய நீசவெவ் வினைகள்
இனைய தித்துணை யென்றுரை யாடுதற் கெளிதோ
கனைக டற்கரை மணலினுக் கதிகமாங் காண்டி.

114
   
  வான நாயக னிதயமா ளிகையினில் வைத்த
ஞான தீபத்தை யணைத்தன னல்லிளங் கோமான்
மேனி வார்ந்தசெங் குருதியை மதித்திலன் வெறுத்தேன்
ஊன மின்மனச் சான்றையு முள்ளுறப் புதைத்தேன்.
115
   
  ஈசன் மைந்தனைத் தினந்தினஞ் சிலுவையி லேற்றி
நீச வெவ்வினை யுஞற்றின னிமலவீட் டுய்க்கும்
மாசில் நீதியை வரைந்தனன் மகிதலத் தெவர்க்கும்
நாச காலத்து மதிவிப ரீதமா நல்லோய்.
116
   
  ஆவ லாயகத் தமர்ந்துபோ ராடிய வருளகூர்
தேவ வாவியு முனிந்தெனை விடுத்தனர் சிதையா
ஜீவ வாக்கெலா மெனக்கல வென்பது திண்ணம்
பாவ காரியே னிதயமும் வைரக்கற் பாறை.
117
   
  வேறுயானினிப் புகல்வதென் விபுதவேந் துருத்துக்
கூறு சாபமுங் கோபமும் வானிடைக் குமுறி
வீறு வீறுறக் கணந்தொறுங் கதித்தெனை வெருட்டும்
ஈறில் ஜீவனுக் கிரக்ஷைமற் றினியிலை யென்றான்.
118
   
                        வேறு
   
  கூட்டுளா னினைய கூறக் கொற்றவ னருள்பெற் றுய்யும்
வீட்டுளா னாக நின்ற வேதியன் விரைந்து பாவத்
தீட்டுளா யெனினு நம்பன் றிருவருட் செயலோ ராதிக்
கேட்டுளா னாக வுன்னைக்கெடுத்ததென் மதிகொண் டென்றான்.
119
   
  நல்குமெய்ம் மகிழ்ச்சி யென்று நனிமதி மருண்டு தீமை
மல்குசிற் றின்ப போகம் வரைவின்றி நுகர்ந்து வாணாள்
அல்கநின் றயர்ந்தே னிந்த வருஞ்சிறைப் பட்டே னந்தோ
புல்குதீ விடத்தில் ஜீவன் போமெனும் பொறியி லாதேன்.
120
   
  என்னுறு மதியீ னத்தா லியைந்ததுர்க் கரும மாய
கொன்னுனைப் பகழி மாரி யுளத்திடைக் குளிப்ப வேவிக்
கன்னலுற் றேனை வாளாக் கடிந்துபுண் படுத்தென் னுள்ளே
மன்னிநின் றுயிரை வாட்டும் வழுவறு ஜீவ சாக்ஷி.
121