பக்கம் எண் :

139


5. பொன்னுல கத்துளோர் புணரி சூழ்புவி
தன்னிலுள் ளோர்தலை தாழ்ந்து போற்றிட
மன்னிய தகையது மருவி வானிழிந்
திந்நிலம் புரப்பதி யேசு நாமமே.

 
6. நன்னெறி புகுத்திடு நவையி னீக்கிடும்
இன்னலை யகற்றிடு மிகல்செ குத்திடும்
உன்னதத் துய்த்திடு மொருங்கு காத்திடும்
எந்நலத் தையுந்தரும் யேசு நாமமே.
 
7. அன்பினுக் குருவநல் லறத்துக் காலயம்
மன்பதைக் கருண்மழை வழங்கு பைம்புயல்
நின்பர மென்றினை வோர்க்கு நித்யபே
ரின்பசஞ் சீவிதம் யேசு நாமமே.
 
8. வஞ்சகக் கூளியை மடிக்கு மந்திரம்
பஞ்சவிந் தியங்களைப் படுக்கு மந்திரம்
செஞ்செவே ஜெகமரு டீர்க்கு மந்திரம்
எஞ்சலின் மந்திரம் யேச நாமமே.
 
9. கூறுமந் திரமறை குணித்த வேதியர்
தேறுமந் திரம்ஜெபத் தினுக்குச் செவ்விதின்
வேறுமந் திரமிலை வேத னார்செவிக்
கேறுமந் திரங்கிறிஸ் தியேசு நாமமே.
 
10. தருமமு மொழுக்கமுந் தவமு ஞானமுங்
கருமமு மீதலாற் கருதில் யாதுமோர்
அருமையும் பயனுமொன் றில்லை யாதலால்
இருமையுந் துணையெனக் கியேசு நாமமே.
 
11. நஷ்டமே தருஜெக நகைக்க நாளெலாங்
கஷ்டஜீ வனஞ்செய்து கழிப்ப மாயினுந்
துஷ்டவல் வினையெலாந் தொலைக்குந் தூமன
இஷ்டகா மியந்தரும் யேசு நாமமே.
 
       தேவாரம் முற்றிற்று.

   
கண்ணிய நறுந்தேனிற் கன்னலின் மதுரிக்கும்
பண்ணில வியகீதம் பயிலிசை யொடுபாடிப்
புண்ணிய குருநாதன் பொன்னடி விழிநீரான்
மண்ணியன் பலர்தூவி யேகினன் வழிபட்டே.
3