பக்கம் எண் :

140

  இப்பரி சிவனேக வெதிரொரு சிறுகுன்றம்
ஒப்பதோ ருயர்பூமி யுளதென வதைநாடி
அப்பன வனுமோடி யணுகவத் திடர்மேலே
துப்புறழ் குருசொன்று தோன்றுவ தெதிர்கண்டான்.

4
   
  மற்றத னருகெய்தி மானத விழியாலே
கொற்றவ னொருசேயக் குருசினி லறையுண்டு
முற்றுகு செஞ்சோரி முழுகிய திருமேனி
குற்றுயி ரொடுநையக் கண்டன னொருகோலம்.
5
   
  அக்கணம் வெரிந்மீதுற் றடுவினை நனிதொக்க
பொக்கணம் விழுந்தொல்லை பன்முறை புரண்டோடிப்
பக்கலி லுறுமீமப் படுகுழி யிடையாழ்ந்து
புக்குழி தெரியாமற் போயது புதைபட்டே.
6
   
  விஞ்சிய கொடுஞ்சும்மை விழுதலு மறைவாணன்
நெஞ்சக மகிழ்ந்தியாக்கை நிமிர்ந்துநின் மலதேவின்
மஞ்சனின் குதித்தீட்டும் வரம்பில்புண் ணியத்தாலே
உஞ்சன னளியேனென் றுருகியுள் ளுவந்தேத்தி.
7
   
  மன்பதை யுயிர்வாழ வருமருண் மணிமல்கும்
அன்புத தியைநோக்கி யாவியி னனல்துற்றி
என்புநெக் குளமாழ்கி யிருவிழி புனல்கொள்ளப்
பொன்புரை சரணீழல் புக்கனன் புகலுற்றான்.
8
   
                     வேறு
   
  சொல்லொன்றா லனைத்துலகுந் தோற்றுவித்தாய் தோற்றியவை
எல்லாமிங் கொருபடித்தா யின்றளவு நின்றியல
வல்லாய்நீ யோர்வரம்பு வைத்தாயுன் வல்லமையைப்
புல்லேனோ சொல்லிப்பு கழ்ந்துரைக்கும் போதத்தேன்.
9
   
  உருட்டுவாய் வையகத்தை யொருநொடியி லுலகினொடுஞ்
சுருட்டுவாய் ககனத்தைச் சூழ்சுடரை நிறுத்துவாய்
திருட்டுவாய் மனத்தினரைத் திரையாழி யிடையமிழ்த்தித்
தெருட்டுவா யடியரையுன் றிறஞ்செப்பற் பாலதோ.
10
   
  ஆக்கவும்வல் லவனீயிங் காக்குவித்த வனவரதங்
காக்கவும்வல் லவனீபின் கருதுங்காற் கணப்பொழிதிற்
போக்கவும்வல் லவனீயிப் பொல்லாங்கு பொறுத்துமுடி
சாய்க்கவருந் திறனென்னே தருமத்தின் றனிமூர்த்தி.
11