பக்கம் எண் :

151

  பொருளிலார்க் கில்லை யிந்தப் பூவுல கதுபோல் யாண்டும்
அருளிலார்க் கில்லா தாகு மவ்வுல கென்ன வான்றோர்
தெருளுரை யேனுங் கொண்டு தேடலீ ரருளை வாவா
இருளுளா ரொளியைப் பேணா ரென்பது சரத மாமால்.

32
   
  மறங்குலா மனத்தீ ரின்னே திரும்புமின் மரபின் ஞானத்
திறங்குலா மநுமா னத்தின் றிரவியங் கொண்மின் போர்த்த
புறங்குலாந் தவவே டத்தைப் போக்குமின் புனித மார்க்கத்
தறங்குலாம் விரத சீல மகத்துற வநுட்டித் துய்ம்மின்.
33
   
  காயத்தை விடுமுன் னுள்ளக் கள்ளத்தை யொருவி மேற்கொள்
மாயத்தை யுதறித் தூய வளமலி பரம கானான்
தேயத்தை நோக்கிச் சென்று ஜீவமா நதியின் புண்ய
தோயத்தைப் பருகி யென்றுந் தொலைவிலா வின்பந் துய்ம்மின்.
34
   
  இற்றிதே யமையு மேனும் மிட்டமென் றியம்பி வேத
நற்றவன் வழியைக் கூடி நனிவிரைந் தேக லோடும்
சொற்றிற மறியா ராய சோரமார்க் கத்தர் தம்மில்
எற்றிவன் றுணிவென் றெள்ளி யெதிருரை யாது சென்றார்.
35
   
  குக்கல்வான் மட்டை கட்டி நிமிர்ப்பினுங் கோண றீரத்
தக்கதோ மூட ருள்ளத் தன்மையு மன்ன தேயாம்
பக்குவ நிலத்தி லன்றிப் பாழ்படு கருங்கற் பாறை
உக்கவை நல்வித் தேனும் பயன்படா தொழியு மன்றே.
36
   
  களங்கமின் மதியைக் காணுங் கண்ணிலா வவர்தம் பாட்டில்
விளங்குமுட் பன்றி போல விடாப்பிடி யாக வோடி
வளங்கெழு தடத்தை நீங்கி வருத்தமென் றுரைபெற் றோங்கு
துளங்கலில் கிரியைக் கிட்டி யேங்கினர் துணுக்க முற்றார்.
37
   
  வெருவருங் காட்சித் தாய வெற்பிதன் மீது செல்லும்
அருநெறி பிடித்தி யாரிவ் வவஸ்தையை யடைவ ரென்னாப்
பெருவழி யிரண்டு பாலும் பிரிந்துபோ வதைக்கண் டந்தோ
இருவரும் பிரிந்து சென்றங் கிடைவழிப் பிணமாய்ப் போனார்.
38
   
  பிரிந்தவப் பெருவ ழிக்குப் பெயர்நாச மோச மென்பர்
விரிந்தமோ சத்தின் மாய சாலான் விழுந்தான் வேடம்
புரிந்தவ னாச மெய்திப் புதையிருண் மலிந்த கானில்
திரிந்திட ருழந்தான் பின்னர்த் திரும்பினா ரில்லை யாண்டும்.
39