பக்கம் எண் :

16

     (பொ - ரை) இவ்வாறு நிகழ்கின்ற காலத்தில் இனத்தவர் பலருங்
கூடி என்னவோ பித்தமேலீட்டினால் இவையெல்லாம் பிதற்றுகின்றாய்?
உனது தலையைச் சாய்த்து இப்பொழுதே உறங்கு. சூரியன் தோன்று
முன்னே சுகமுண்டாகுமென்று இத்தன்மையான வார்த்தைகளைப் பேசி
அவ்விடம் நின்று நீங்கினார்.

 
   

என்னுறு வருத்தந் தேரா திகழ்ந்துரை யாடு கின்ற
இன்னர்புன் மதிதா னென்னென் றிரங்கிநித் திரைசற் றின்றிப்
பன்னருந் துயர முற்றான் பகலிலும் பதின் மடங்காக்
கன்னலோ ருகம தாகக் கழிந்தன வவற்குங் கங்குல். 13

     (பொ - ரை) என்னிடத்திற் பொருந்தியிருக்கின்ற வருத்தம்
இத்தன்மைத் தென்பதை அறியாமல் என்னை இகழ்ச்சியாய்ப் பேசுகின்ற
துன்பத்துக்கிடமாகிய இவர்களுடைய சிற்றறிவு என்ன என்று
பரிதாபப்பட்டு நித்திரை சிறிதுமில்லாமல் பகலிலும் பதின்மடங்காகச்
சொல்லுதற்கரிய துன்பமுற்றிருந்தான். அந்நாள் இரவின் நாழிகைகள்
அவனுக்கு ஒவ்வோர் யுகமாகக் கழிந்தன.

 
   

கனையிருட் பிழம்பை நூறிக் கதிரவன் குணபாற் றோன்ற
வினைசுமந் தலறி யுள்ள மெலியுமாத் துமவி சாரி
மனைவயிற் குறுகியுய்யு மதியிலா நிருவி சாரர்
அனையவ னாத்ம சோக மதிகரித் ததனைக் கண்டார். 14

     (பொ - ரை) திரட்சியாகிய இருட்பிழம்பைக் கிழித்துக்கொண்டு
சூரியன் கிழக்குத் திசையில் தோன்ற, பாவப்பாரத்தைச் சுமந்து அலறி
இருதயம் மெலியும் ஆத்தும விசாரியினுடைய வீட்டுக்கு அறிவில்லாத
நிர்விசாரர் சென்று அவனுடைய ஆத்மசோகம் அதிகரித்திருந்ததைக்
கண்டனர்.

 
   

கண்டன ருண்மை தேரார் கவல்கின்றா ரல்லர் வேரி
உண்டுவா யுழறு வார்போ லுணர்வின்றி யுரைக்க லுற்ற
மிண்டருக் கிரங்கி நேரு மெய்ம்மையைத் தெரித்தல் நன்றென்
றண்டர்நா யகனை யுள்ளி யாத்தும விசாரி சொல்வான். 15

     (பொ - ரை) பார்த்த இவர்கள் உண்மையை அறிகின்றாருமில்லை,
கவலைகொள்ளுகின்றாருமில்லை. கள்ளுண்டு வாய் உழறுவார்போல
உணர்வின்றிப் பேசத்தொடங்கிய அறிவிலிகளுக்கு இரங்கி, நிகழும்
உண்மையை அவர்களுக்குத் தெரிவித்தல் நல்லது என்று தீர்மானித்து,
அண்டர்நாயகனை மனதில் தியானித்துக் கீழ்வருவனவற்றைச்
சொல்லுவான் ஆத்மவிசாரி.

 
   

திருவருண் மலிந்து செங்கோல் செலுத்தியிச் சகத்தை முற்றும்
ஒருகுடை நிழற்கீ ழாக்கி யுவந்துகாத் தளிக்கும் வேந்தன்
மருவுதங் குடைநி ழற்கீழ் வாழுமன் னுயிர்கட் கெல்லாம்
தருபிர மாணம் பத்தாந் தனித்தனி சாற்றக் கேண்மின். 16