பக்கம் எண் :

179

 

தாயெனப் பரிவுடன் வினவுந் தையலாள்
சேயுயர் மதிமுக நோக்கிச் செவ்விய
தூயவன் றன்வர லாறு தொன்றுதொட்
டேயவை சுருக்கிநன் கியம்பி னானரோ.        

22
     
 

கேட்டனள் யூகியென் றுரைக்குங் கேதமில்
வாட்டடங் கண்ணினள் மற்றை மூவரைக்
கூட்டின ளிவனிளை குறிகு ணங்களைக்
காட்டினள் கைநெல்லிக் கனியின் வாய்மையால்.

23
     
 

காரிகை யூகிசொற் கருத்தை யோர்ந்தவர்
சீரிய னிவன்செயல் செவ்வி தாதலிற்
கூரிய தவநிலை குறித்துப் பேசுதும்
ஆரிய வருகவென் றழைத்துப் போயினார்.     

24
     
 

முன்பொரு பற்றிலர் முகங்கண் டோரிலர்
பின்பெதுங் குறித்திலர் பேணுஞ் செய்கையோ
டென்புநெக் குருகித்தம் மினத்தொ டேற்றனர்
அன்பெதுங் கருதிடா தளிக்கு நீரதே.         

25
     
 

அறப்பெருஞ் சாலையை யடுக்குங் காற்பலர்
புறப்படூஉ வெதிர்ந்தருள் பொழியுங் கண்ணினார்
மறப்பரு நன்மொழி வழங்கி வாழ்த்தினார்
சிறப்பொடு பூசனை செய்யுஞ் செய்கையார்.    

26
     
 

புவனபோ கங்களைப் புதைத்திட் டாத்தும
கவனமுற் றருநெறி கடைப்பி டித்தவன்
உவகையோ டுபசரித் துறவு காட்டுமத்
தவநிலை முதியரைத் தாழ்ந்து போயினான்.    

27
     
 

ஆங்கொரு சார்பினி லழகு வீற்றிருந்
தோங்கிய தவளமா ளிகையி னுள்ளுறப்
பூங்கொடி மடந்தையர் புகுந்து புங்கவ
ஈங்கினி திருக்கவென் றிருக்கை யீந்தனர்.     

28
     
 

நன்றியோ டாசனத் திருந்து நம்பனை
ஒன்றிய சிந்தையோ டுவந்தி றைஞ்சினான்
துன்றிய வுபாதிதொக் கடர்ந்த சூழலில்
பொன்றிடா வகைதனைப் புரந்த துள்ளியே.    

29