பக்கம் எண் :

191

வாக்குகள் தவறாது நிறைவேறவும், பக்தர்கள் மனதில் ஸ்தோத்திர
மதிகரிக்கவும் மனித அவதாரமெடுத்து அவர்கள்பேரிலுள்ள கருணையால்
சிலுவை மரத்தில் ஏறிய மெயஞ்ஞான சூரியனாகிய இரட்சா பெருமானின்
பாதங்களை வணங்குவோமாக.

 
 

வேறு

   
 

துனிதரு வினைமுனி தூய சிந்தனை
கனிதர நன்னெறி கடைப்பி டித்திட
இனிதுவந் தடியவ ரிதயத் தென்றும்வாழ்
புனிதநல் லாவியைப் போற்று வாமரோ.          3

     (பொ - ரை) துன்பத்திற்குக் காரணமானவைகளை நீக்கி,
நல்லெண்ணமாகிய கனிகள் உண்டாகுமாறு, சன்மார்க்கத்தை உறுதியாக
நாம் கைக்கொள்ள, இனிமையாக இறங்கி பக்தர்களுடைய இதயத்தில்
வாசஞ் செய்யும் பரிசுத்தமாகிய நல்ல தேவாவியை எப்பொழுதும்
வணங்குவோமாக.

 
 

வேறு

   
 

காவ னத்திலே நிசியிடைத் தனியிருந் துலகெலாங் கதிசேர
ஜீவ னைக்கொடுத் திடவரு திறநினைந் திரத்தவேர்த் துளிசிந்தி
ஆவி யிற்கொடுந் துயரமுற் றையருக் கபயமீட் டதுமந்நாள்
தேவ மைந்தனார் சகித்தவே தனையுமென் சிந்தைவிட் டகலாவே. 4

     (பொ - ரை) மரங்களடர்ந்த சோலையில் ஓர் இரவில் தேவகுமாரன்
தனியாக இருந்து, உலக முழுவதும் நற்கதியையடைய தான் உயிரைக்
கொடுக்கவேண்டிவரும் ஸ்திதியை உணர்ந்து, வேர்வைத் துளியை
இரத்தமாகச் சிந்தி கொடிய ஆத்தும வருத்தத்தையடைந்து பிதாவினிடம்
அபயமிட்டதும், அக்கால் அவர் அடைந்த வேதனையும் என் மனதை
விட்டு நீங்கமாட்டா.

 
 

மூசு முண்முடி முடித்திட முனிவுறா முகசரோ ருகப்போதும்
நேச மோடுபே துருமனங் கசந்தழ நோக்கிய நெடுங்கண்ணுந்
தேசு குன்றிவெங் குருதிநீர் பொழிதரு செய்யமே னியுமெம்மான்
ஏசு நாயகன் றிருவடித் துணையுமென் னிதயம்விட் டகலாவே. 5

     (பொ - ரை) அடர்ந்த முட்கள் நிறைந்த முடியை சிரசில் சூட்டப்
பெற்றும் கோபமடையாது தாமரைப் புஷ்பத்தைப்போல் வாடாமலிருந்த
அவர் முகமும் பேதுரு மனங்கசந்தழும்படி அவனை நேசத்துடன் பார்த்த
நீண்ட கண்களும், அழகு குன்றிப்போய் இரத்தமும் நீரும் வடியப்பெற்ற
பரிசுத்த சரீரமும் ஸ்ரீ இயேசுபிரானின் திருவடித்துணையும் என்
மனத்தைவிட்டு நீங்கமாட்டா.