பக்கம் எண் :

195

 

அழிவி லின்பவு லகத்தை யாக்குமெய்
வழியு மாசறு சத்திய மாண்பதும்
ஒழிவி னித்திய ஜீவனு முண்மையா
மொழியின் யானல தின்றிதை முன்னுமின்.     18

     (பொ - ரை) அழிவற்ற மோட்ச உலகத்தைக் கொடுக்கும்
உண்மையான வழியும் குற்றமற்ற சத்தியத்தின் மாட்சிமையும் ஒழிவற்ற
நித்திய ஜீவனும் உண்மையாகச் சொல்லுமிடத்து என்னைத் தவிர
வேறில்லை. இதை யறிவீர்.

 
 

என்னில் வேறல ரெந்தையு மெந்தையார்
தன்னில் வேறலன் யானுமித் தன்மையின்
மன்னு மென்னைம யலறக் காண்டலே
உன்ன தேசனைக் காண்டலென் றுன்னுமின்.   19

     (பொ - ரை) 'என் பிதா என்னில் வேறானவரல்லர். என் பிதாவினில்
நானும் வேறல்லேன். இந்த நிலைமையில் நிலைத்திருக்கும் என்னைச்
சந்தேகமற்றவராகக் கண்டு தரிசிப்பதே பரமபிதாவைக் காண்பதாகும்
என்று உணருங்கள்.'

 
 

பிரிவை யுள்ளிக்க லங்குதல் பெற்றியன்
றுரிமை யோடென்னு ரைபிடித் தொண்டவம்
புரிமின் யான்புனி தாவியைப் புக்கிவண்
வரவி டுப்பலு மக்கருண் மல்கவே.         20

     (பொ - ரை) 'நான் உங்களைவிட்டுப் பிரிந்துபோகுதலை
நினைத்துக் கலங்குதல் சரியல்ல. என் வார்த்தையை நீங்கள் சொந்தம்
பாராட்டி சிறந்த பக்தி செய்துகொண்டிருங்கள். உங்களுக்கு அருள்
பெருகும்படி நான் போய் பரிசுத்த ஆவியை இங்குவந்து சேரும்படி
யனுப்புவேன்.'

 
 

எந்தை யாவியி ருநிலத் தெய்திடிற்
பந்த நீதிப கர்நடுத் தீர்வையென்
றிந்த ஞேயமெ ளிதிற்பு லப்பட
விந்தை யாகமெய்ஞ் ஞானம்வி ளங்குமால்.   21

     (பொ - ரை) 'என் பிதாவினது பரிசுத்த ஆவி இப்பெரிய
உலகத்தில் வந்தால், பாவம் நீதி நடுத்தீர்ப்பு முதலிய அன்பின்
விஷயங்கள் தெளிவாக விளங்குமாறு மெஞ்ஞானம் இன்னதுதானென்று
உங்கள் உள்ளத்தில் நன்கு புலப்படும்.'

 
 

ஏது கேட்பினு மென்னொரு நாமத்திற்
றாதை வேண்டுவ தந்துச தோதயம்
ஆத ரிப்பரென் றின்னன வாண்டகை
ஏத மில்லுரை யாடிடு மெல்வையில்.         22