பக்கம் எண் :

199

தன் எஜமானன் என்றறிந்தும் வாலை ஆட்டிக்கொண்டு அவனிடமே
வந்துசேரும். அப்படியிருக்க, சிறந்த பேரருளோடு கடவுள்
செய்தவைகளுக்கேற்ற நன்றியை உணராமல் போய்விட்டான். இவன்
எப்பேர்ப் பட்டவனோ?

 
 

காத்தநல் லாவியைக் கடிந்து கண்டகச்
சாத்தனுக் கிதயத்தைத் தானஞ் செய்பவர்
கூத்தர்கைக் குரங்கிலக் குணுங்க ராட்டிடத்
தீத்தொழின் முயன்றழிந் தொழித றிண்ணமே.      35

     (பொ - ரை) தன்னை இதுவரை காப்பாற்றிவந்த பரிசுத்த
ஆவியை வெறுத்து, கொடிய சாத்தானுக்குத் தன் இருதயத்தைத்
தானமாகக் கொடுப்பவர், கூத்தாடி கையில் அகப்பட்ட குரங்கைப்போல
பிசாசுக்கள் தன்னையாட்ட (அதின் பலனாக) தீய செயல்களைச் செய்ய
ஆரம்பித்து கெட்டு நாசமடைவது உண்மையே.

 
 

அடுத்துநான் கெடுப்பனென் றறைந்த சூழ்வினை
முடித்திடுந் தருணமீ தென்ன முன்பணங்
கொடுத்தவப் பதிதரைக் குறுகி னான்கொலுங்
கடுத்துறு மனத்துயூ தாசென் கள்வனே.           36

     (பொ - ரை) கோபம் மிகுதியாயுள்ள யூதாஸ் என்னும் கள்ளனே
'நான் அண்டியிருந்து கெடுப்பேன்' என்று சொல்லிய வஞ்சகமான
எண்ணத்தை நிறைவேற்றுங்காலம் இதுவெனக் கண்டு, முன்னமே பணம்
கொடுத்திருந்த அந்தப் பாதகரிடம் போய்ச் சேர்ந்தான்போலும்.

 
 

துன்மதி போயபின் சூழ்ந்த தொண்டர்க்கு
நன்மதி சிற்சில நவிற்ற நாயகன்
தன்மனத் தெண்ணிமேற் றதும்பு மன்பினாற்
கன்மனங் கரைந்திடக் கழறு வாரோ.            37

     (பொ - ரை) கெட்ட எண்ணமுடைய யூதாஸ் அவ்விடம் விட்டு
நீங்கியபின், நம்பெருமான் தம்மைச் சூழ்ந்திருந்த அடியார்கட்கு
அவர்கள் மேல் அதிகரித்துள்ள அன்பினால் சில நல்ல புத்திமதிகளைச்
சொல்ல தம் மனதில் எண்ணங்கொண்டு, கடினமான அவர்கள் மனம்
கரையுமாறு (பின்வருமாறு) சொல்லுவார்.

 
 

மனுமக னாற்பிதா மகிமை யேரங்கலால்
நனிவிரைந் தவனுக்கு மகிமை நல்குவார்
இனியொரு சிறுபொழு திருப்ப னும்முடன்
கனிவொடும் பின்னெனைக் கருதித் தேடுவீர்.      38

     (பொ - ரை) 'மனுஷகுமாரனால் தேவன் மகிமையடைவதால்
மிகவும் சீக்கிரத்தில் அம்மனுஷகுமாரனுக்கு மகிமையை யளிப்பார்.
நான் இனி கொஞ்சக்காலந்தான் உங்களுடன் இருப்பேன். பின் என்னை
அன்போடு நாடித்தேடுவீர்கள்.'