பக்கம் எண் :

200

 

மக்களே யான்செலு மிடத்து வந்துநீர்
புக்கிடக் கூடிய தன்றிப் போழ்திலே
மிக்கவன் புடையராய் விளங்கு வீரெனிற்
றக்கவென் சீடரென் றறியுந் தாரணி.           39

     (பொ - ரை) 'என் பிள்ளைகளே! நான் போகுமிடத்திற்கு நீங்கள்
வந்து சேரமுடியாது. இப்பொழுது நீங்கள் மிகுந்த அன்புடையவர்களாய்
பிரகாசித்து நடப்பீர்களானால் நீங்கள் எனக்குகந்த சீஷர்கள் என்று
உலகம் அறிந்துகொள்ளும்.'

     சீஷர்களை 'மக்களே' என்று அன்புடன் அழைக்கிறார்.
யோவான் 13 : 32.

 
 

ஆதலா லொருவரி லொருவ ரன்புகூர்ந்
தேதமில் குணத்தரா யிருமி னீண்டுநும்
மீதுநா னேசத்தை விளைத்த வாறுபோல்
ஈதொரு கற்பனை யியம்பி னேனென.           40

     (பொ - ரை) 'ஆகையினாலே நான் இங்கே உங்கள்பேரில்
அன்பு பாராட்டினதுபோல, நீங்கள் ஒருவர்பேரில் ஒருவர் அன்புகூர்ந்து,
குற்றமற்ற குணசாலிகளாக இங்கு நடந்துகொள்ளுங்கள். இதை ஒப்பற்ற
கற்பனையாக உங்களுக்குக் கொடுக்கிறேன்' என்றார்.

 
 

    (பேதுருவின் வீண் சபதம்)

   
 

மூண்டெழு துயரினான் முடுகிப் பேதுரு
ஆண்டவ வெங்குநீ ரணைகின் றீரென
வேண்டிட வின்றலை மேவிச் சில்பகல்
மாண்டபின் பற்றுவை மனக்கொள் வாயென்றார்.  41

     (பொ - ரை) பேதுரு என்னும் தொண்டன் (அவர்களை விட்டுப்
பிரிந்து போவதாக இரட்சா பெருமான் சொன்னது கேட்டு)
மனதிலெழுகின்ற அதிக வருத்தத்தினால் அவரை அணுகி, 'ஆண்டவரே
நீர் எங்கே போகின்றீர்' என்று கேட்க, அதற்கு அவர்: 'இதற்குப்பின்
சில நாள் கழிந்தபின் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ளுவாய்.
இதையறிந்துகொள்' என்றார்.

 
 

ஏனுமைத் தொடந்திடே னின்றென் ஜீவனை
நானுமக் காகவே நல்கு வேனெனத்
தானுடைப் பலத்தையே சார்ந்து பேசலும்
வானவர் கோமகன் மறுத்துங் கூறுவார்.         42