பக்கம் எண் :

202

என்னை மூன்றுதரம் முழுதும் மறுதலிப்பாய். இனி நடக்கப்போகும் உண்மையை
உனக்குச் சொன்னேன்' என்றார்.

 
 

இன்னண நிகழ்வுழி யிருந்த சீடருந்
தன்னிக ராயதற் பரனுந் தம்முனம்
மன்னுபஸ் காவெனு மறியைத் துய்த்துமே
முன்னிய மப்படி முடித்திட் டாரரோ.        47

     (பொ - ரை) இவ்வாற நடக்கும்பொழுது அங்கிருந்த சீஷர்களும்
தமக்குத்தாமே உவமையாகும் இரட்சா பெருமானும் தம்முன்
வைக்கப்பட்டுள்ள பஸ்கா ஆட்டை ஆதிவழக்கத்தின்படி புசித்து அதை
முடித்தார்கள்.

 
 

                        வேறு
                   (திருவிருந்தளித்தல்)

   
 

பொங்குபர மானந்த நமக்கருள வந்தமனுப் புதல்வர் தாமே
செங்கரத்தா லப்பமெடுத் ததைப்பிட்டுத் தோத்திரித்துச் சீடர்க் கீந்தீ
துங்களுக்காய் மரணத்துக் கொப்புவிக்கு மெனதுடலீ தென்னை யுன்னித்
தங்கிடுநீ ரிந்தவகை யியற்றியெனக் கருணையொடு சாற்றிப் பின்னும், 48

     (பொ - ரை) பொங்குகின்ற மோட்ச இன்பத்தை நமக்கு அருள
அவதாரம் எடுத்துவந்த மனுஷகுமாரனாகிய அவரே (செந்தாமரைப்போன்ற)
சிவந்த கையினாலே அப்பத்தையேடுத்து அதைப் பிட்டு ஸ்தோத்திரம் செய்து
சீஷர்களுக்குக் கொடுத்து: 'உங்கள் நிமித்தம் மரணத்திற்கு ஒப்புவிக்கப்படும்
என் சரீரம் இது. என்னை நினைவுகூரும்படி இவ்வாறு இதைச்
செய்துகொண்டிருங்கள்' என்று கருணையாகச் சொல்லி மறுபடியும்,

 
 

இனிமைதரு பழரசபாத் திரமேந்தி ஸ்துதிசெலுத்தி யிதிலே நீங்கள்
அனைவீரும் பருகுமின்மற் றிதுபுதிய வுடம்படிக்கைக் கமையச் சிந்தும்
எனதிரத்தம் பாவமன்னிப் பிதனாலே யுண்டாகு மினியிப் பானந்
தனைநுகரே னென்பரம தந்தையிராஜ் ஜியந்தனினீர் சாரு மட்டும். 49

     (பொ - ரை) உருசியுள்ள திராட்சப்பழரசம் உள்ள பாத்திரத்தைக்
கையில் எடுத்து அதை ஆசீர்வதித்து: 'நீங்கள் எல்லாரும் இதைப் பானம்
பண்ணுங்கள். இது என் புதிய உடம்படிக்கைக்காக சிந்தப் படும் என்
இரத்தமாக இருக்கிறது. பாவமன்னிப்பு இதனாலே உண்டாகும்.