பக்கம் எண் :

208

 

                     வேறு

   
 

தாதை யார்திருமு னம்ப ணிந்துசுத னின்ன வாறுபல தண்ணறும்
போத விழ்ந்துமது வார்ந்தெ னப்புனித வாய்தி றந்தினிய புத்துரை
ஒதி மானிடவு யிர்க்க ணங்கடிரி யேக நாதரையு ளத்துனி
ஆத ரத்தொடுஜெ பிக்கு மாறிதனை மாதி ரிக்கருள்செய் தாரரோ.

     (பொ - ரை) குமாரனாகிய ஸ்ரீ இயேசுபிரான் பிதாவின்
சந்நிதானத்தில் குளிர்ந்த வாசனையுடைய அரும்பு மலர்ந்து, அதிலிருந்து
தேன் சொரிவதுபோல் பரிசுத்தமான வாயைத்திறந்து, இவ்வாறு பலவிதமான
புதிய விஷயங்களை வணக்கத்துடன் சொல்லி, மானிடஜாதிகள்
திரியேகநாதரைத் தங்கள் மனதில் தியானித்து ஆசையோடு ஜெபிப்பதற்கு
முன்மாதிரியாக இவ்வாறு ஜெபம்செய்தருளினார்.

 
 

                   (கிறிஸ்தவனின் நெறி)

   
 

துருவ மீனின்வழி துருவிநண்ணுவர்தி ரைக்கடற்றுறைம ரக்கலத்
தருவி னைஞரருண் மூர்த்தி சிந்தனையை யமுத வாக்கையவர்
                                          செயலையுட்
கருதி நீக்கமற முன்னர் வைத்துவில காது நன்னெறிக டைப்பிடித்
துரிமை சேர்பரம பதம டைந்துநனி யுய்வ ருத்தமகி றிஸ்தவர். 64

     (பொ - ரை) கடலிலே கப்பலோட்டும் அரிய தொழிலையுடையவர்கள்
துருவ நட்சத்திரத்தைக் குறியாகக்கொண்டு நாடி அலைகளோடு கூடிய
கடலைக்கடந்து துறைமுக ஸ்தலத்தை அடைவர். அதுபோல உத்தம
கிறிஸ்தவனென்பார் அருள்நாதரின் சிந்தனை அமிர்தம்போன்ற அவர்
திருவாக்கு அவர் திருச்செய்கை என்பவற்றை ஓயாது நினைந்தவராய்
அவற்றையே தம் இலக்காக முன் நிறுத்தி, அவற்றினின்றும் விலகாது
காத்து நடத்து, நல்ல வழியைக் கடைப்பிடித்து, தமக்குரியதாகிய பரலோக
பாக்கியத்தை யடைந்து இனிது வாழ்வர்.

 

               (பிரார்த்தனை செய்யும் வகை)

 

தணிந்தி டாதுபரி சுத்த வாவியன றங்கு பத்தர்கள்ச தோதயம்
பணிந்தி டும்மிதய கார்மு கத்தைநனி பற்றி யன்புநெடு நாணியும்
அணிந்த ருஞ்செபமொ ழிக்க ணைக்குநம தாண்டை செங்குருதி
                                           யாட்டியுட்
டுணிந்த பக்திவிசு வாச மாம்பெரிய தோட்ப லங்கொடுதொடுத்து மே. 65

     (பொ - ரை) பரிசுத்த ஆவியாகிய அக்கினி என்றும் அவியாமல்
தங்கும் பக்தர்கள் கடவுளைப் பணியும் இருதயமாகிய வில்லை நன்றாகப்
பிடித்து, அன்பாகிய நீண்ட நாணேற்றி, அருமையான ஜெபவார்த்தைகளாகிய
அம்புக்கு நமது ஆண்டவரது சிவந்த இரத்தத்தைப் பூசி, மனத்தினுள்
துணிந்து, பக்தி விசுவாசமென்னும் தோட்பலங்கொண்டு பிடித்து அவ்வம்பைத்
தொடுத்தலே ஜெபமாகும்.