பக்கம் எண் :

21

     (பொ - ரை) ஞானராஜன் இட்ட விளம்பரத்தின் சத்தத்தைக்
கேட்டும் இன்னமும் இத்தேசத்திலிருந்து நாசமடைதல் நன்றல்லவென்று
சுத்த சத்தியத்தையே யுமக்குச்சொல்லி வற்புறுத்துகின்ற என்னைப்
பித்தனென்று இகழ்கின்றீர். உமது பேதைமை பெரிது.

 
   

இழவுவந் திடுமென் றேங்கி யீரைம்ப திருபா னாண்டு
கிழமுனி பகர்ந்த நீதி கேட்டுண ராத மூடப்
பழவுல கத்தை மேனாட் பயோததிப் பரப்பு மேலிட்
டழவழ வமிழ்த்திக் கொன்ற வற்புத மறிகி லீரோ. 33

     (பொ - ரை) மரணம் வருமே என்று ஏக்கங்கொண்டு நூற்றிருபது
வருஷம் வயோதிப முனிவராகிய நோவா சொல்லிய நீதியைக்கேட்டும்
உணராத மடமைகொண்ட பூர்வ உலகத்தை முன்னாளில் சமுத்திரப் பரப்பு
மேலிட்டு ஜனங்கள் அலற அலற அவர்களை அமிழ்த்திக்கொன்ற
அற்புதத்தை அறியமாட்டீரோ?

 
   

தீதோடு நின்றீ ரின்னே திரும்புமின் வேந்தன் சீற்றம்
போதோடிங் கெழும்பு மென்ற புங்கவ னுரையைத் தள்ளி
வாதாடு மூடர் பொன்ற வயங்கனன் மாரி சிந்திச்
சோதோமைச் சுடுகா டாக்கித் தொலைத்தமை தோன்றா
                                      தன்னே. 34

     (பொ - ரை) பாவத்தோடுகூடி நிற்கின்றவர்களே! இப்பொழுதே
மனந்திரும்புங்கள். கடவுள் வேந்தனுடைய கோபாக்கினி ஜுவாலித்து
எழும்பும் என்ற தூயவனாகிய ஆபிரகாமுடைய சொல்லைத்தள்ளி
வாதாடின மூடர்கள் அழியும்வண்ணம் பலத்த அக்கினிமழை
பெய்யச்செய்து சோதோமைச் சுடுகாடாக்கித் தொலைத்ததை நீங்கள்
அறியாததென்ன?

 
   

அடல்கெழு மிறைசீற் றத்தா லகோரவா தைகளெ ழும்பிப்
படருறீஇ எகிப்து நாடு பட்டபா டுணரீர் கொல்லோ
மிடலுடைப் பார்வோன் றானுஞ் சேனையும் விரைந்து கிட்டிக்
கடலிடைக் குளித்த மாற்றங் கதையெனக் கருதி னீரோ. 35

     (பொ - ரை) வலிமைபொருந்திய இறைவனுடைய கோபத்தால்
அகோரமான வாதைகள் எழும்பிப் படர்ந்து எகிப்து தேசம் பட்டபாட்டை
யுணரமாட்டீரோ? செருக்குக்கொண்ட பார்வோனும் அவனுடைய
சேனையும் விரைவாய்ச் சென்ற இஸ்ரவேலரை அணுகியும் சமுத்திரத்தில்
அமிழ்ந்தனர் என்னும் சொல்லைப் பொய்யென நினைத்தீரோ?

 
   

வருமுன்னர்க் காவா தார்க்கு வாழ்க்கையெத் துணைய வேனும்
எரிமுன்ன ருற்ற வைத்தூ றெனக்கெடு மென்ப ரின்னல்
பொருமுன்னர் விலகி யோடிப் புகலிட மாய கோமான்
திருமுன்ன ரடையி னித்ய ஜீவனை யடைதல் திண்ணம். 36