(பொ
- ரை) இவனுடைய மனைவி தன் இருகண்களினின்றும்
நீர்த்தாரை வடிய கணவனுக்கு புத்திமாறாட்டம் வந்துவிட்டது, இனி
நான் என்ன செய்வேன் என்று கவலைகொண்டு மனம் வருந்தினாள்.
நுண்ணிய அறிவையுடைய பெரியவர்களின் நூலோடு பழகித்
தெளிவடையாத பெண்ணறிவென்பதெல்லாம் பேதைமை யுடையதல்லவோ?
|
பொற்றொடி
யினையு மாறும் புறக்கணித் தகந்தை பேசி
உற்றவ ரிகழ்ந்த வாறு முணர்ந்தவாத் துமவி சாரி
எற்றிவர் தன்மை யந்தோ வென்னினிச் செய்வ லென்று
சற்றுநின் றேகாந் தத்திற் றம்பிரான் திருமுன் கிட்டி. 45
|
(பொ
- ரை) பொற்றொடியினளாகிய அவன் மனைவி வருந்திய
விதத்தையும் உற்றவர் புறக்கணித்து அகந்தைபேசி இகழ்ந்த விதத்தையும்
உணர்ந்த ஆத்தும விசாரியானவன் ஐயோ! இவர்களுடைய தன்மை
எப்படிப்பட்டது? இனி நான் என்னசெய்வேன் என்று சற்று நின்று தனித்த
ஒரிடத்தில் சர்வேஸ்வரனுடைய சந்நிதானத்தையடைந்து,
|
சருவலோ
கத்தை யாளுந் தயாபரா தமியேற் சூழ்ந்த
நிருவிசா ரிகள்சன் மார்க்க நெறியறி யாது செய்யும்
பொருவரும் பிழைக ளெல்லாம் பொறுத்தருள் புரியுந் தூய
திருவுள மிரங்கி யென்று ஜெபித்தனன் சிந்தை யொன்றி. 46
|
(பொ
- ரை) சர்வலோகத்தையும ஆளும் தயாபரா! அடியேனைச்
சூழ்ந்திருக்கின்ற நிர்விசாரிகளாகிய இவர்கள் சன்மார்க்க நெறியை
யறியாமற் செய்கின்ற ஒப்பற்ற பிழைகளையெல்லாம் பரிசுத்த
திருவுளமிரங்கி மன்னித்து அவர்களுக்கு அருள்புரியுமென்று மனமும்
வாக்கும் ஒத்து ஜெபித்தனன்.
|
அறங்கிளர்
பாலோ கத்துக் கரசனைப் பரவிப் போந்து
புறங்கிளர் வெளியு லாவிப் புத்தகச் சுருளை நாடி
இறங்கிய முகத்த னாகி யென்செய்கே னிரக்ஷைக் கென்று
கறங்கெனச் சுழலு நெஞ்சன் கவன்றனன் கலக்க முற்றான். 47
|
(பொ
- ரை) தர்மமானது பிரகாசிக்கின்ற பரலோக இராசனைத்
தோத்திரித்து அவ்விடம்விட்டு நீங்கிப் பக்கத்திலுள்ள
வெளியிடத்திலுலாவி, புத்தகக்சுருளை நாடி, இறங்கிய
முகத்தையுடையவனாகி இரட்சிப்புக்கு யான் என்ன செய்வேன் என்று
காற்றாடிபோற் சுழலுகின்ற நெஞ்சனாய்க் கவலைகொண்டு,
கலக்கமுற்றனன்.
|
தேசநா
சத்தை யெண்ணித் திகிற்படும் பிணிந்து நின்ற
பாசவெவ் வினையின் மிக்க பாரந்தா லழுந்தும் யாரே
நீசனே னுய்யு மாறு நெறிதெரித் திடுவ ரென்னும்
மாசறு முயிரைக் கூவி வாய்திறந் தரற்று மாதோ. 48
|
(பொ
- ரை) நாசதேசத்தை நினைத்துத் திகில்கொள்ளுவான்.
தன்னைக் கட்டி நிற்கின்ற பாசமாகிய கொடியவினையினது மிகுந்த
பாரத்தால் அழுந்துவான். நீசனாகிய நான் உய்யும்வழி யாரே
தெரிவித்திடுவர் என்பான். குற்றமற்ற ஜீவனை வாய்திறந்து கூவி
வருந்துவான்.
மெய்யுணர்ச்சிப்படலம்
முற்றிற்று
_____________________________
|