பக்கம் எண் :

267

  திருமி யேகினர் சீடர்ம கதலேன்
ஒரும டந்தைநம் முன்னத ஜீவனைக்
கரும பூமியிற் கண்டருள் பெற்றுடன்
தரும சீலரைச் சார்ந்தனள் சாற்றினாள்.

462
   
  தாயை நாடிய கன்றெனத் தற்பரன்
சேயை நாடித்த விக்கின்ற சீடனாந்
தூயன் மூழ்குது யர்க்கட னீத்துய
நாய கன்றிருச் சேவையை நல்கினார்.
463
   
  எம்ம வூருக்கன் றேகிய சீடரின்
மம்மர் நீங்கம திவிளக் கேற்றியும்
அம்ம வங்கவ ரோடுண வாற்றியுஞ்
செம்மல் சிந்தைதெ ருட்டினர் செவ்விதின்.
464
   
  ஈண்டு காட்சியெ திர்ந்தவ ரெய்தியாம்
மீண்டெ ழுந்தருள் வித்தகன் றன்னைநேர்
காண்டல் செய்துட னுண்டுக ளித்தனம்
மாண்ட போதன ரீரென்று வாழ்த்தினார்.
465
   
  தக்க சான்றிது வென்னினுந் தம்முளே
புக்க வையம்பொ திந்துபு றஞ்செலா
தொக்க வாங்கொரு றையுளி னுள்ளுறத்
தொக்கி ருந்தனர் பன்னொரு தூயரும்.
466
   
  ஆன போழ்தத்த டியவர் நாப்பணே
தூன லந்திகழ் மேனியிற் றேன்றிநந்
தீன ரக்ஷக தெய்வத மெய்ச்சமா
தான மல்கித்த ழைக்கவென் றாரரோ.
467
   
  அண்டர் நாயகன் றோன்றிய லரிதழ்
விண்ட வாய்மொழி கேட்டும்வி ழிக்கெதிர்
கண்டு மின்னுங்க லங்கின தன்றிமெய்த்
தொண்ட ருள்ளந்து றந்தில தையமே.
468
   
  ஐய முந்திகி லுங்கலந் தம்புவி
உய்ய வந்திங்கு யிர்த்தெழுந் துன்னத
தெய்வி கந்திகழ் மேனியைத் தேர்கிலார்
வெய்ய வாவிய தென்றுவெ ருண்டனர்.
469