பக்கம் எண் :

27

     (பொ - ரை) சாகவும் மனமில்லை, தண்டனைக்கு எதிர்
நோக்கிப் போகவும் துணிவில்லை. புறத்துள்ளாரைப்போல்
விட்டுப்போகிறதற்கு வேறு புகலுமில்லை. இதற்கு ஈடு ஏதாவது
செய்யலாமோவென்றால் அதற்குச் சிறிதும் பலமில்லை. ஆகையால் நான்
பதைக்கின்றேன் என்று சொன்னான் ஆத்துமவிசாரி.

 
   

அஞ்சுவி சேஷனீ யறைந்த யாவையும்
வஞ்சமின் றுண்மையே மருவு மிம்மையில்
எஞ்சுறா வேதனை யியைதல் கண்டுமேன்
அஞ்சுதி சாவதற் கமைதி கூறெனா. 9

     (பொ - ரை) நீ சொல்லிய யாவும் வஞ்சனையில்லாதன, அவை
உண்மையே, நிகழுகின்ற இம்மையில் குறைவுபடாத
வேதனையுண்டாகின்றதைக்கண்டும் சாவதற்கேன் பயப்படுகின்றாய்? இது
இவ்வாறு பொருந்தியிருப்பது ஏன் என்று கூறுவாயாக என்று அழகிய
சுவிசேஷகன் கேட்க,

 
   

ஜென்மநாட் டொடங்கியான் செய்த தீவினை
என்முது குளுக்குற விறுத்த தாற்புலைக்
கன்மிகள் குழுமுதீக் கடற்கி டங்கிடை
அம்மையி லமிழ்த்துமென் றஞ்சு கின்றனன். 10

     (பொ - ரை) ஜென்ம நாட்டொடங்கி யான் செய்த தீவினைகள்
என் முதுகு வருந்தும்படியாக அங்கே தங்கினதால்
புலைத்தன்மையையுடைய பாவ கர்மிகள் கூடியிருக்கின்ற அக்கினிக்
கடற்கிடங்கில் என்னை மறுமையில் அமிழ்த்துமென்று அஞ்சுகின்றேன்.

 
   

பலகலை கற்றுணர் பரம யோகியிவ்
வுலகமன் னவரெமை யொறுத்தற் கஞ்சுதும்
நிலவுல கியாவையு நிறுத்த நீதிமன்
அலகறு தண்டனைக் கஞ்சிடேங் கொலோ. 11

     (பொ - ரை) பல வேறு சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த பரமயோகி,
இவ்வுலக மன்னவர் எமைத் தண்டிக்கின்றதற்கு அஞ்சுகின்றோம்.
பூலோகமனைத்தையும் நிலைநிறுத்திய நீதிமன்னனுடைய அளவற்ற
தண்டனைக்குப் பயப்படமாட்டோமா?

 
   

இனையசிந் தனையென திதயத் தூன்றலால்
வனைபொலன் கழலினாய் வருந்து வேனென
அனையவை யறிந்தடுத் தவர்க்கு நன்மையே
நினைசுவி சேஷனு நிகழ்த்து வானரோ. 12