|
செய்விரவிப்
பயிர்வளர்க்குந் தெண்ணீர்போற் படைவீரர்
கைவிரவி யறம்வளர்த்துத் தற்காக்குங் கருணையொடு
மெய்விரவி மிளிர்ஞான வியன்படைகள் வேந்தனவாற்
பொய்விரவா வருள்வேத புங்கவவிங் குளவென்றாள்.
|
39 |
|
|
|
|
என்றினைய
பத்தியெனு மேதமறு தவக்கிழத்தி
மன்றிலங்கு வயப்படையின் வரன்முறையும் விவரணமும்
வென்றிபுனை தருமாண்பும் விரித்துரைப்ப வியப்பினொடு
நன்றுகேட் டினிதுவந்து வேதியன்மற் றிவைநவில்வான்.
|
40 |
|
|
|
|
அன்னாயிப்
பிரபஞ்சத் தாரணியத் தருள்வழியின்
முன்னாகத் துணிந்துசெல முழுதுமெனைத் தெருட்டினவால்
பொன்னாடு புரந்தருளும் பூபதிபுண் ணியத்தமைந்த
மின்னாரும் படைக்கலம்போல் விளங்குநின
தருண்மொழியே.
|
41 |
|
|
|
|
அவ்வியமே
முதலாய வகத்திருளை யறத்தொலைக்குஞ்
செவ்வியவிம் மணியரங்கிற் செறிந்திலங்கித் திகழ்கின்ற
திவ்வியசர் வாயுதமா வருக்கத்திற் சிறிதொன்றே
வெவ்வியதெம் முனைமுருக்கி விறல்வாகை
புனைந்திடுமால்.
|
42
|
|
|
|
|
கீர்த்திமலி
யிளவரசன் கிறிஸ்துவின்போர்ச் சேவகர்கள்
ஆர்த்தியுடன் றரித்துலவு மாயுதங்க ளிவையென்னிற்
கூர்த்திகைகை விடுத்திறைஞ்சித் தொழும்புகூ டுவதல்லாற்
பார்த்திசையி னெதிர்நிற்கப் படுபகையு முளவாங்கொல்.
|
43 |
|
|
|
|
இருண்மேவு
பகைதெறவென் றினிதமைத்த விவ்வெல்லாம்
பொருண்மேவு படைக்கலங்க ளொவ்வொன்றும் புநருலகத்
தெருண்மேவு துணைபுரிந்து ஜீவரக்ஷை யளிப்பனவால்
அருண்மேவு பரலோகத் தரசன்சீர் வாழியவே.
|
44 |
|
|
|
|
என்றின்ன
பரிசுவியந் தெடுத்தியம்பும் வேதியற்கு
முன்றுன்னு மலைக்காட்சி முறைநாளை மொழிதுமெனாப்
பொன்றுன்னு மெழின்மாத ரவரவர்தம் முழைபோக
நன்றுன்னி விசுவாசி தன்னுறையு ணாடினனால்.
|
45 |
|
|
|
|
வேதியனு
மன்றிரவு விழி துயின்று விடிகாலை
மாதவப்பள் ளியைக்குறுகி வரன்முறையஞ் கலிபுரிய
மேதகுநற் றவத்தியரவ் விருந்தினனைக் கொடுசென்று
மீதுயர்ந்த வணிமாட மேனிலைமண் டபத்தணைந்தார்.
|
46 |