பக்கம் எண் :

287

  துற்று பேரிடர் யாவையு மொருங்கறத் துடைத்துக்
கொற்ற வன்கிரு பாஸ்தமே குறிக்கொண்டு காத்த
திற்றை நாள்வரை யின்னுமென் வழித்துணை யாகி
முற்றுங் காக்குமென் றொருப்படீஇ வழிக்கொள முயன்றான்.

79
   
  உருகு காதலி னருந்தவக் கிழத்திய ருவந்து
வருக வென்றுசென் றாயுத சாலையை மருவி
இருக ருக்குள பட்டய மாதிய வேதி
திருகு லாமறை வாணனுக் களித்தனர் தெரிந்து.
80
   
  எள்ள ருங்கும ரேசன்யாத் திரிகருக் கென்ன
உள்ளி யாக்கிய வப்பமு முசிதமுந் திரிகைத்
தெள்ளு தீங்கனி வற்றலுங் கைக்கொடு செல்க
கொள்ளு கையவென் றுதவின ரமைவனகொணர்ந்து.
81
   
  மந்தி ராயுத வருக்கமு மருந்தன வுணவும்
அந்த ணன்றனக் கின்றமை யாப்பொரு ளாகப்
புந்தி யாலுற மதித்துநன் றறிமொழி புகன்று
சிந்தை யாலுறப் புனைந்தனன் றிவ்யபோர்க் கோலம்.
82
   
  மேவும் யுத்தசன் னத்தனாய் விளங்கிய திறலோன்
பூவை யர்க்கெலா மஞ்சலி வரன்முறை புதுக்கி
ஆவி யிற்பிரி யாவிடை யாசியும் பெற்று
ஜீவ பாதையைக் கடைப்பிடித் தேகினன் செய்யோன்.
83
   
  காவ லாளனை வினவியக் கதிவழி நிதானி
போவ தாகிய செயலறிந் துளமகிழ் பூப்ப
ஆவ லாயுப சரித்துவந் தனமினி தாற்றிச்
சாவ தானநன் விடைகொடு போயினன் சதுரன்.
84
   
  காத லாய்நெடுந் தூரமெய்ப் பத்தியங் கனையே
ஆதி மாதருன் னாவியிற் பிரிகலம் யாமென்
றோதி மங்கள சாஸன விடையினை யுதவிப்
போது வாயென விடுத்தனர் தாயரே போல்வார்.
85
   
  இந்த மாதவக் கிழத்தியர் குணஞ்செய லெலாமென்
சிந்தை யுள்ளுறத் திகழ்ந்தன நனவுறு செயல்போல்
விந்தை யங்கனா வின்னமு நிகழ்வுழி விரும்பி
அந்த ணன்றனைத் தொடர்ந்தனன் மேல்விளை வறிவான்.
86
   
                         காட்சிப் படலம் முற்றிற்று
   
                            குமாரபருவம் கவி, 714
     
                       முதல் இரண்டு பருவங்கள் கவி,1830.