|
உன்னத
பரலோ கத்தி லொருதனிச் செங்கோ லோச்சி
மன்னர சாட்சி செய்யு மகத்துவ கடவுள் வேந்தன்
பன்னரும் புனித நீதி பரமகா ருணியம் பூத்த
சன்னிதி மகிமைச் செல்வந் தழைப்பது திருநா டென்றும். 1
|
(பொழிப்புரை)
உன்னதமாகிய பரலோகத்தில் ஒப்பற்ற
தனிச்செங்கோலை நடத்தி நிலைபெற்ற அரசாட்சி செய்துவரும்
மாட்சிமையுற்ற கடவுள் வேந்தனுடைய சொல்லற்கரிய பரிசுத்தம் நீதி
பரம காருண்ணியம் என்னுமிவைகளே பொலிந்து விளங்குகின்ற
அவருடைய சந்நிதானத்தின் மகிமைச்செல்வமானது எப்போதும்
தழைப்பது திருநாடு.
|
அருண்முகில்
கிளம்பி யன்பி னார்கலி யமுத மொண்டு
திருமலி தருர க்ஷண்ய திவ்விய சிகரி போர்த்துப்
பொருவருங் கருணை மாரி பொழிந்தபுண் ணியமா நீத்தம்
ஒருமுக மாகி ஜீவ கங்கையா யுலாய தன்றே. 2
|
(பொ
- ரை) அருளாகிய மேகங்கிளம்பி, அன்பாகிய கடலில்
அமிர்தமாகிய நீரைமொண்டு, திருமலிந்த ரட்சண்ய கிரியென்னும்
திவ்விய சிகரியில் போர்த்து, ஒப்பற்ற கருணை மாரியாகப்பெய்த
பெருமைபொருந்திய புண்ணிய வெள்ளமானது ஒரு முகமாகி
ஜீவகங்கையாய் அந்நாட்டில் ஓடினது.
|
சேணுற
நிவந்த மேருச் சிகரிநின் றிழிந்து மண்ணோர்
காணரும் புனித ஜீவ கற்பக மலரை யேந்தி
மாணுறு பரம ஞான மணியணிக் குவைவ ரன்றி
நீணிலஞ் செழிப்புற் றுய்ய நீத்தமாய்ப் பரந்த மாதோ. 3
|
(பொ
- ரை) ஆகாயத்தைப் பொருந்தும்படி உயர்ந்த மகாமேரு
பர்வதத்தினின்று இறங்கி மண்ணாட்டார் காணுதற்கரிய தூய்மையான ஜீவ
கற்பக மலரை யேந்தி, மாட்சிமைப்பட்ட பரம ஞானமாகிய ரத்தனங்களை
வரிசை வரிசையாய் ஒதுக்கி, பெரிய உலகமானது செழிப்புற்று உய்யும்
வண்ணம் வெள்ளமாய்ப் பரவியது அந்த ஜீவ கங்கை.
|
முத்தலைச்
சிகரி நின்று முளைத்தவிச் சீவ கங்கை
வித்தக விமல ஞான போனகம் விளைவித் தூட்டிப்
பித்தளை யுலகைத் தூய்மை பிறங்குபொன் னுலக மாக்கி
உத்தமந் திகழ்த்துஞ் சீர்சா லொழுக்குடைத் தின்று மென்றும். 4
|
|