பக்கம் எண் :

305

  விளித்த கூக்குரல் செவிபுக விட்புலத் தரசன்
அளித்த மெய்ப்பல மகம்புக வயதியி னெகிழ்ந்த
ஒளித்த பட்டயங் கரம்புக வுணர்வுவந் தூன்றிக்
களித்த சிந்தையோ டெழுந்தனன் வேதியன் கடுகி.
101
     
  அணித்த ழிம்பனைக் கண்டுநன் றாமென வகத்திற்
குணித்து வல்விரைந் தொருகையிற் கேடகங் கொளுவிப்
பணித்த மந்திரப் பட்டய மொருகையிற் பற்றித்
துணித்து வஞ்சநெஞ் சுழக்குவல் காவெனச் சொல்லி.
102
     
  மந்தி ரத்தனி வாட்படை யோங்கிவன் கண்ணன்
தந்தி ரத்தட மார்புறப் புகுத்தலுந் தலைசாய்ந்
தந்த ரம்பட வலறின னழிபெருங் குருதி
சிந்தி யங்கவன் வெஞ்சினத் தீத்தழல் சிதைத்த.
103
     
  நெஞ்சு ரங்கிழிந் தழிம்பனீ ணிலத்துறீஇ நெடிது
சஞ்சலம்படத் தடஞ்சிறை யிரண்டையுந் தடிவான்
செஞ்சொ லாரணன் மந்திர வாள்கரந் திகழ்த்த
அஞ்சி வாய்வெரீஇ மீக்கிளர்ந் ததோகதி யடைந்தான்.
104
     
  திரும லிந்தவி ஜெகமெலாந் திரளினும் ஜெயித்தற்
கருமை யாயவெவ் வழிம்பனை யாரணக் கிழவன்
ஒருமை யாய்ப்பொரு தோட்டினன் வெற்றிபெற் றுய்ந்தான்
தரும மேஜெயந் தருமெனல் சதோதய சரதம்.
105
     
 

மன்னு திவ்யசர் வாயுத வருக்கத்தின் வலியும்
பொன்னி லத்தர சன்றரு திருவருட் பொலிவுந்
தன்னி ருந்துணை யாக்கலி னழிம்பனைச் சமரில்
வெந்நி டத்துரந் தான்றிட மெய்விசு வாசி.

106
     
  வம்பர் நிந்தனை வசைமொழி வறுமைநோ யிடுக்கண்
இம்பர் நேரினும் பகைத்திற மெதிரினு மெல்லாம்
உம்ப ரேசெல வொப்படைத் தொருமன மாக
நம்பி னோரைக்கை விடுவரோ நலம்புரி நம்பன்.
107
     
  முற்றுந் தன்றுணை யாயசு ரேசனை முருக்கச்
செற்ற நல்கிய திருவருட் செயலினைத் தேறிக்
கொற்ற வன்சுதன் றிருவடிக் கேரகன கத்தில்
வெற்றி மாலையைப் புனைந்தனன் வேதியர் திலகன்.
108