பக்கம் எண் :

309

  மாதரை யுலகைப் பொன்னை மதித்தற நெறிகை விட்ட
பாதகந் திரண்டு சாவின் படுகுழி கவிழ்ப்ப மாழ்கிப்
பூதலம் வெடித்த வாயிற் பொதுளிய நிரையச் செந்தீ
மீதெழுஞ் சுவாலை தாக்க வெந்துளங் கருகு வாரை.
23
     
  சாற்றுநன் மதியைத் தள்ளித் தன்மனம் போன போக்கில்
வீற்றுவீற் றாகிச் சென்று விளைத்ததீ வினையைச் சுட்டிக்
கூற்றம்வந் துடற்றி நெஞ்சிற் கொடுந்தழ லிறைப்ப வாதை
ஆற்றரி தாகி யாவிவ யழுகிநின் றலறு வாரை.
24
     
  மெய்வழி தெரிந்தார் போல விழுத்தவ வேடம் பூண்டு
பொய்வழி யலைந்து தீமை புரிந்தபே தமைவந் தூன்றச்
செய்வழி வகைகிட் டாது தெருமர லுழந்து தேம்பி
உய்வழி யினியின் றென்னா வுயிர்ப்பெறிந் துயங்கு வாரை.
25
     
  விக்கிர கத்துக் கந்தோ மெய்த்தெய்வ வழிபா டாற்றும்
அக்கிர மத்தையுள்ளி யாருயிர் பதைப்பத் தேவ
உக்கிர கோபத் தீயி னொள்ளழற் கிடங்கர் வீழ்ந்து
கொக்கரித் தலறி யேங்கிக் கூக்குர லெழுப்பு வாரை.
26
     
  இக்கொடு மரணச் சூழ லெண்ணில ரெய்தக் கண்டும்
மக்களை மனையைப் பேணி வறும்பொரு ளீட்டி மாயச்
சிக்குளே சிக்கி வாளாச் சிதைத்தனம் வாணா ளென்னாத்
தொக்கபே ரிடர்க்குண் மூழ்கித் துடிதுடித் தயரு வாரை.
27
     
  உய்திற நாடு வார்போ லுவப்புரை பேசி யொண்பூக்
கொய்திறம் போல மற்றோர் கொழுநிதி கவர நாளுஞ்
செய்தவஞ் சனைகளாய தீமுகத் தயில்வேல் தாக்கி
நொய்துளங் கிழிய மாழ்கி நொறுங்கிநொந் துலம்பு வாரை.
28
     
  ஆத்தும சுகத்தைப் பேணா தனவர தமுநன் றூட்டிக்
காத்துடுத் தணிந்து பேணிக் கதித்தபா ழுடலை யந்தோ
தீத்தொழி லுருவு வாய்ந்து செறிந்தவன் கிருமிக் கூட்டம்
பாத்துண்டு களிப்ப மாழ்கிப் பதைபதைத் துழல்கின் றாரை.
29
     
  கண்ணொளி மழுங்க லாகிக் காதடை பட்டுக் கைகால்
தண்ணெனக் குளிர்ந்து நாடி தளர்ந்துபுண் பட்டு நெஞ்சந்
துண்ணெனக் கலங்கி யாவி துடித்துமூச் சொடுங்கு காலை
பண்ணிய வினைக்கு நேர்ந்த பயனெனப் பதைக்கின்றாரை.
30