பக்கம் எண் :

311

  இத்திற மாவி சாரி யிருட்சிறைப் படுகர் துற்றிக்
கத்துகூக் குரலுந் துன்பக் காட்சியுங் கண்டு கேட்டுச்
சித்தசஞ் சலியனாகத் தெய்விக சகாயத் தாலே
முத்திநூ னெறியைப் பற்றி முறைபிச காது சென்றான்.
39
     
  அங்கொரு சிறையி னூடே யக்கினிக் கடன்மே லோங்கிப்
பொங்கிய தென்னச் சீறிப் புகைந்துகந் தகத்தீ மண்டி
எங்கணு நடுங்கி யேங்க வெரிகொடு மலபா தால
வெங்கொடு நகரங் காந்து விரித்தபேழ் வாயைக் கண்டான்.
40
     
  கொந்தழல் பருகி யோங்கு கொடும்புகை யாய கொண்மூ
அந்தரத் தெழுந்து மூடி யவிரொளி யார மின்னி
உந்திய விரைச்சன் மேய வுருமிடி யேறு தாக்கிக்
கந்தகப் புலிங்க மாய கனன்மழை பொழியக் கண்டான்.
41
     
  கையுறு விளக்கைப் போக்கிக் கடுங்குழி கவிழ்வார் போல
மெய்யுறத் திகழ்த்தும் வேத விற்பன நெறிகை விட்டு
மையிருள் படர்ந்து தொக்க மாரணப் படுகர் வீழ்வுற்
றையகோ வைய கோவென் றலறுபே ரொலியுங் கேட்டான்.
42
     
  கண்டுகேட் டுளமுங் கண்ணுங் கருகின துணுக்குற் றேங்கிக்
கொண்டபே ரச்சத் தாவி குலைந்தறி வழிந்தி யாக்கை
தண்டென விறைத்து நின்ற தலத்திலே தரித்து நின்ற
துண்டுகொ லுயிர்மற் றென்னாத் திகைத்தன னுணங்கி யானும்.
43
     
  ஆயிடை யருகர்க் கிட்டி யழிபடு நரகக் கோட்டை
வாயின்மேற் கொள்ளா தென்ற மகாதிரு மந்தி ரத்தைச்
சேயவன் காதி லூதித் தெருட்டிய செஞ்சொற் கேட்டேன்
தூயச ரீரி தானோ பிறிதொன்றோ சொலத்தேர் கில்லேன்.
44
     
  மருண்டறி வழிந்து நின்ற மறைவலா னுணர்வு தோன்றித்
தெருண்டன னாகி யொல்லை திவ்விய செயலைப் போற்றி
வெருண்டபோ துரந்தந்துய்க்கும் விறல்கொள்கே டகத்தைப்பற்றி
இருண்டகா னகத்து முன்னிட் டேகினான் சிறிது தூரம்.
45
     
  அமையச்சே தீபந் தூண்டி யலர்த்துவார் போலோர் வாக்குக்
கமையுற்ற தொண்டர்க் காவி காட்டிய தகைமை யோரின்
இமயத்தை நிகர்த்த துன்ப மிடுக்கண்வந் துறினு மேற்ற
சமயத்தே யுதவு மன்றோ தற்பரன் கிருபை யென்றும்.
46