பக்கம் எண் :

313

  ஆதலிற் றுணிந்து முன்னின் றாற்றலே தரும மென்னாச்
சாதகத் திரளை நோக்கித் தற்பர னாமே கோவா
மேதகு திருநா மத்தின் விறல்கொண்டு வேத நுண்ணூற்
பாதையிற் படர்வே னென்று பன்னினா னுரத்துப் பல்கால்.
55
     
  கோளரி முழக்கங் கேட்ட குஞ்சரத் தொகுதி போலுங்
காளரி முழக்கங் கேட்ட கட்செவிக் குலமே போலும்
வாளரி மறையோன் சொற்ற வாய்மைகேட் டஞ்சி யொல்லை
மூளரி யலகைப் பொம்மன் முன்னிலா திரிந்த மாதோ.
56
     
 

பகைத்திற மிரிந்த போதும் பயங்கர மிரியா தாகித்
திகைத்தல மந்து சிந்தை தியங்கினான் சிறிது செவ்வி
உகைத்தெழு மூக்கத் தோடுள் ளுணர்வுவந் துவகை யோங்கிச்
சிகைத்தலஞ் செங்கை சேர்த்தித் திருவருள் பழிச்சிச் சென்றான்.

57
     
  இன்னணம் புனிதத் தொண்ட னேகுழி யெதிரோர் சார்பில்
துன்னரு மரண பள்ளச் சூழலைத் துருவும் போதும்
என்னொடுந் தேவ ரீரே யிருக்கின்றீ ரெதற்கு நாயேன்
பின்னிடைந் தஞ்சே னென்று பேசிய மாற்றங் கேட்டான்.
58
     
  இத்தகு வனப்பு வாய்ந்த விசைமொழி மிழற்ற வல்ல
உத்தம பத்தர் சில்லோ ருளர்கொலா மரண வைப்பில்
எத்தனை மோச நாச மெதிரினு மிடையூ றின்றி
வித்தக விமலன் காக்கும் விதமிதென் றுவகை பூத்தான்.
59
     
  தீங்கின்றி யுயிர்பெற் றேகுந் திவ்விய திருக்கூட் டத்தின்
பாங்குறி லடியார்க் கெல்லாம் பரிந்தருள் புரியும் பெம்மான்
ஆங்கென தாவிக் கேற்ற வாதரம் புரியா ரோவென்
றோங்கிய காத லீர்க்க விரைந்தன னுற்று நோக்கி.
60
     
  துன்னரு முத்தி வேட்ட தூயயாத் திரிகர்க் கிட்டி
என்னொரு தனிமை நீங்கப் பெறுமெனி னிகலொன் றின்றி
நன்னய மொழிகள் பேசி நடப்பதெத் தனைக்கு நன்றென்
றுன்னினன் மறையோ னுள்ளத் துருவெளி யுற்ற தன்றே.
61
     
  விடிவுறு கங்குற் காலை வேதிய னெனது சிந்தைப்
படிவமோ வேறோர் தேவ பத்தியி னுருவு வாய்ந்த
வடிவமோ முன்னர்ச் செல்வ தியாதென மருண்டு தேறி
நொடிவரை நிற்றி வந்தேன் யானென நுவன்றான் கூவி.
62