பக்கம் எண் :

315

  சுருங்குநூல் வழியைப் பற்றித் தூயவன் முன்செல் காலை
மருங்கெலாங் கண்ணி மாய வலைசுழல் பொறிகண் மல்கிப்
பெருங்கிடங் குளைசெங் குத்துப் பிறங்கலென் றினைய தொக்கு
நெருங்குபல் விலங்கு கிட்டி நின்றுநின் றுழல்வ கண்டான்.
71
     
  புகலரு நாச மோசம் பொருளிவீற் றிருக்கு மிந்த
இகலுறு மரண வைப்பி லிரவுபட் டுழலா வண்ணம்
பகலொளி திகழ்த்திக் காத்த பரமகா ருணிய முள்ளிக்
ககனநா யகனைப் போற்றிப் படுகரின் கடைவந் துற்றான்.
72
     
  மிருத்துவி னந்தத் துள்ள வியனிரும் பிலத்துண் மேயோர்
திருத்தகு ஜீவ பாதை சிதைத்திட முயலுந் தீயர்
வருத்திவே தியரைக் கொன்றூன் சுவைபெறு மறவோர் தம்மிற்
கருத்தழிந் துழலி ரண்டு கள்ளவல் லரக்க ருண்டால்.
73
     
  இங்கிவ ரிருவ ரும்பண் டெண்ணில்யாத் திரிக ராவி
நுங்கியோ ருகுத்த சோரி நொதிப்படு கிடங்குந் தூய
அங்கம்வெந் துக்க சாம்பற் குவைகளு மகில லோகம்
எங்கணுந் தெரியச் சாக்ஷி யியம்புவ தின்று காறும்.
74
     
  பாவிய ரிருவர் தம்மிற் பகற்குரு டாய தீயன்
ஜீவனுக் கிறுதி காட்டுஞ் சிலேட்டுமந் தொடங்கி நைவன்
கோவிய லழித்த மற்றோர் கொடியவ னாற்றல் குன்றிச்
சாவடிப் பட்டி யாக்கை தளர்ந்தனன் முதுமை தாக்க.
75
     
  அடங்கின ரனர்த்தஞ் செய்யு மரக்கரோ ரிருவ ரேனும்
மடங்கலே றனையான் கிட்ட வயோதிக வைரி யாய
படங்கிள ரரவு சீறிப் பணிக்கரும் பழிச்சொல் லென்னும்
விடங்கலுழ்ந் திடவெண் ணாது வேதிய னெறியிற் போனான்.
76
     
  மல்லல்கூர் பரம சீயோன் மலைக்கதி பதியாந் தெய்வ
நல்லருட் டுணைமையாலே நவிலரு மரணச் சூழல்
எல்லையைக் கடந்தோர் கானத் திறுத்தன னாச தேச
அல்லலைக் கடந்து வந்த வாரணக் கிழவ னம்மா.
77
     
  அலைபுரண் டனைய துன்ப மடரினு மழலைக் காலும்
மலையென மரணங் கிட்டி மலையினு மருட்பே றாக
நிலையுறு மனத்திட் பந்தா னெஞ்சுறத் திகழு மாயிற்
கலைமதிக் கதிர்முன் னுற்ற விருளெனக் கழிதல் கண்டாம்.
78