பக்கம் எண் :

320

  சிற்றின்ப கருமமே யன்றிச் செய்வினை
மற்றிலை யென்பது மனக்கொண் மாதவம்
முற்றிநீ மறுமையின் முத்தி மாநலம்
பெற்றிட வெத்தனை யூழி பேருமோ.
31
     
  பூதல மனைத்துமோர் புணர்ப்பி னாற்றருஞ்
சூதுமா நகரிடைத் துன்னி யான்பெறு
மாதரை மணந்திறு மட்டும் வாழ்கெனக்
காதலித் தென்னுளங் கரையப் பேசினான்.
32
     
  தெருண்டமே லவனெனத் திருகி யென்மனம்
மருண்டதங் கவனய வசனத் தாயினும்
இருண்டமூஞ் சியின்மறை யெழுத்துக் கண்டுடன்
வெருண்டகந் தெருண்டது வெறுப்புக் காட்டியே.
33
     
  ஐயகேள் பழையமா னுடனை யங்கவன்
மையுறு கிரியையை வரைந்து நீங்கெனுஞ்
செய்யவா சகமது தெரியக் காண்டலுஞ்
சையென விகழ்ந்தனன் றகுவ தன்றெனா.
34
     
  இச்சகம் பேசியா ளாக்கி யென்னையக்
கொச்சைவன் சிறைப்படுத் துயிரைக் கொள்ளுவன்
நிச்சய மெனவொரு நினைவு தோன்றலாற்
குச்சிதன் முகங்குறிக் கொண்டு நோக்கியே.
35
     
  நின்னையுங் கெடுத்துநீ ணிலத்தை யுங்கெடுத்
தென்னையுங் கெடுத்தனை யெனினு மேழையேன்
தன்னையாட் கொண்டது தம்பி ரானருள்
முன்னைய னல்லனென் றுணர்தி முந்தநீ.
36
     
  ஓசைநீ ருலகர சுரிமை நல்கினும்
ஆசைமா தரைமண மாற்று கிற்கிலேன்
நாசநின் மனைக்கடை நச்சுவார் கொலாம்
ஈசனோர் கடைத்தலை யெய்து மெம்மனோர்.
37
     
  வருகிலேன் முதியநின் வழிக்கொள் வாயெனக்
கருகிய சிந்தையான் கனன்றுன் னாருயிர்
பருகவோர் மறவனை விடுப்பல் பாரெனத்
திருகினா னுடலையென் னுயிர்தி யங்கவே.
38