பக்கம் எண் :

33

     (பொ - ரை) மேன்மைபொருந்திய அத்திருநாடெங்கும் ஞான
உழவர்களின் வேலை இவ்வாறு முடிவில்லாதிருத்தலினால் தருமமாகிய
நெற்பயிர் விசுவாசமாதிய நல்ல கருவைப் பொதிந்து, முற்றி,
தேவகிருபையால் ஜீவமணிக் கதிர்களை நெருக்கமாய் ஈன்று,
குறைவில்லாத பேரின்ப போகத்தை விளைவிக்கும்.

 
   

எண்படு மிதய மென்னுஞ் செறுவிடை யெல்லி ராவாப்
பண்டுபடுத் தூன்று சத்யப் பைங்கழைக் கரும்பு பல்கிக்
கண்படைத் தோங்கி யுய்த்த நறுஞ்சுவை கனிந்த பாகின்
விண்படு போகந் துய்ப்பார் வேதியர் குழுக்கண் மாதோ. 17

     (பொ - ரை) மதிக்கப்படுகின்ற இருதயமென்னும் வயல் நிலத்தைப்
பகலும் இரவுமாகப் பண்படுத்தி, அவ்விடத்தில் ஊன்றிய சத்தியம்
என்கின்ற பசுமையான கரும்பு பலுகிக் கணுக்கள்கொண்டு வளர்ந்து
சொரிந்த நல்ல சுவையையுடைய கனிந்த பாகினால் கூட்டங்கூட்டமான
வேதியர் பாலோகத்துக்குரிய போகத்தை யனுபவிப்பார்.

 
   

வீறுகொள் மதுரச் செந்தேன் விளைக்குமுந் திரிகை வாய்ந்த
தாறுகள் பிதிர்ந்து சிந்தித் தலைத்தலை பெருகி யோடுந்
தேறல்புக் களைத லாலே தெளித்தசித் திரப்பூம் பண்ணை
நாறுகள் குலவி யோங்கி வளர்வுறு நலத்த நாளும். 18

     (பொ - ரை) பெருமைதங்கிய மதுராமாகிய தேனை
உண்டாக்கக்கூடிய திராட்சைக்கொடியில் உள்ள பழக்குலைகள் பிதிர்ந்து
சிந்தி இடங்கள் தோறும் பெருகியோடுகின்ற ரசமானது புகுந்து கலத்தலால்
சிறந்த சித்திரம் போலும் அழகிய வயல்கள் எப்போதும் நாறுகள்
ஒன்றோடொன்று நெருங்கி வளர்கின்ற நலத்தையுடையன.

 
   

புண்ணிய நதிதீ ரத்துப் பொருவரு மருத வைப்பில்
நண்ணிய பயிர் வருக்கந் தருக்குலம் பிறவு நல்கும்
எண்ணரும் பயனை யீட்டி யிறைவனைப் பரவித் துய்த்துக்
கண்ணகன் றிருநா டெங்குங் கடிவிழாக் கொள்ளு மன்றே. 19

     (பொ - ரை) இடம் அகன்ற அத்திருநாட்டிலுள்ளோர்
அப்புண்ணிய நதியின் தீரத்திலே ஒப்பில்லாத மருதநிலங்களிற்
பொருந்திய பயிர்வர்க்கங்களும் விருக்ஷசாதிகளும் மற்றைத் தாவரங்களும்
கொடுக்கின்ற எண்ணுதற்கரிய பலனைச் சேர்த்து ஈஸ்வரனை நமஸ்கரித்து
அவற்றை அனுபவித்து விசாலமான இடமெங்கும் பெரிய திருவிழாக்களைக்
கொண்டாடுவர்.

 
   

ஜீவநீர்த் தடங்க டோறுஞ் செழும்புனல் குடைவோ ரீட்டம்
தாவருங் கழனி தோறுந் தருமச்செஞ் சாலி யீட்டம்
பூவலர் பொய்கை தோறும் புதுமதுத் திவலை யீட்டம்
மீவரு மெழிலி தோறும் வேந்தனோர் கருணை யீட்டம். 20