பக்கம் எண் :

34

     (பொ - ரை) ஜீவ நீர்த்தடாகங்கள்தோறும் செழுமையான
நீராடுகின்றவர்களுடைய கூட்டம், குற்றம்நீங்கிய வயல்கள்தோறும்
தருமமாகிய நெற்பயிர்களின் கூட்டம். புஷ்பங்கள் விளங்குகின்ற
பொய்கைகள் தோறும் புதிய தேன் துளிகளின் கூட்டம்.
மேலேயிருந்து
வருகின்ற மேகங்கள்தோறும் கடவுள் வேந்தனது ஒப்பற்ற கருணையின்
கூட்டம்.

 
   

           வேறு

முத்தி நாட்டெழின் முயங்கக் காட்டலில்
நித்ய ஜீவநீர் நிலைய கன்றிடா
துத்த மக்குலத் தோதிமக் குழாம்
பத்தி செய்தவப் பள்ளி போலுமால். 21

     (பொ - ரை) சாகாத நித்திய ஜீவனைச் சுரக்கின்ற குளங்கள்
(தேவாலயங்கள்) பரலோக இராஜ்ஜியத்தின் அழகிய வைபவங்களைப்
பிரதிவிம் பித்துக் காட்டுதலினாலே உத்தம சாதியைச்சேர்ந்த
அன்னப்பட்சிகளின் கூட்டம் (ஈண்டு வெண்ணிறத்தவரான ஐரோப்பிய
ஸ்திரீகளின் கூட்டம்) அந்த நித்திய ஜீவ நீர்நிலையைவிட்டு நீங்காமல்
வசிக்கின்றன. ஆதலால் அவைகள் பக்தியோடு திருத்தொண்டர்
தவம்பயிலுகின்ற தேவாலயம் போலுமுள்ளன.

     (விசேடவுரை) பிரபஞ்ச வனாந்தரத்திலே நெறி தப்பியலைந்து
திரிந்து இளைத்துவிடாய்த்த ஆத்ம கோடிகளுக்கு அந்த விடாயைத்
தணித்து ஆரோக்யத்தையும், பரமசுகத்தையுமருளிக் காக்கவல்லது ஸ்ரீ
கிறிஸ்து பெருமானது கருணைப்பெருக்கமாதலில் அதனை 'நித்திய
ஜீவநீர்நிலை' என்றும், அந்தக் கருணைப் பெருக்கே ஜீவருக்கு
அதிரிஸியமாயிருந்த பரலோக பேரின்ப வாழ்வைத் துலக்கமாய்க்
காட்டியதாதலில். 'முத்தி நாட்டெழின் முயங்கக் காட்டலில்' என்றும்,
இத்யாதி உசித சுகானு பவங்களை ருசித்தறிந்து மேன்மேலுமவாவி அந்த
நிலையை விடாதுபற்றி முயற்சிக்கின்ற சுவேத வர்ணத்தாரான
மாதர்கூட்டத்தை 'உத்தமக் குலத்தோதிமக்குழாம்' என்றும், ஆகவே
இந்தக் கூட்டத்தார் பிரதிதினமும் அனுஷ்டித்துவரும் ஜெபதப
விரதமுதலிய சத்கர்மானுஷ்டானங்களும் மெய்த்திருத்தொண்டர்
நியமனப்படி குழீஇ அண்டாண்டு முறையாய் நடத்திவரும் ஸ்துதி
தோத்திர ஜெபமுதலிய தேவாராதனையோடு நிருவிகற்பமாய்த்
தோன்றலில் அதனைப் 'பத்திசெய்தவப் பள்ளிபோலும்' என்றும் கூறினார்,
இதுமுதல் ஆறு கவிகளுக்கு (21 - 26) உரை இந் நூலாசிரியரே எழுதியது.

 
   

மாக மீதுநேர் கருணை மாரிபெய்
மேகங் கண்டுகண் டுவந்து வித்தகத்
தோகை மாமயி லகவுஞ் சூழல்வாய்
நாக மாயுமே நாக மாயுமே. 22

     (பொ - ரை) ஆகாயத்திற்கூடின அருள்மழை பொழிகின்ற
மேகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து ஞானமுள்ள சிறந்த
தோகையையுடைய மயில்கள் (இங்கே சுதேச ஸ்திரீகள்) ஆனந்திக்கின்ற
பொழில்கள்தோறும் தந்திரமுள்ள பசாசாகிய சர்ப்பந் தலையை நீட்டாது
ஒழிவான். சுவர்க்க லோகவாசிகள் இந்தக் காட்சியைக் கூர்ந்து
கவனிப்பார்கள்.