பக்கம் எண் :

344

தீத்தொ ழிற்படு மாயையூர் சேருமக் காலை
கோத்து ரைத்தவென் வாய்மையைக் குறிக்கொடு கருதி
ஏத்த ருஞ்சரு வேசனா ரெழிற்றிருக் கரத்தும்
ஆத்து மங்களைக் கையடை யாக்குமி னஞ்சீர்.

24
   
  என்ற கத்துநல் லுணர்வெழ வின்னன தெருண்டு
கன்றி னுக்குளங் கசிந்திடு கறவையான் கடுப்ப
நன்று ளங்கொளுஞ் சொன்மதி புகட்டின னவைதீர்
குன்று றாநலங் குலவுமெய்ச் சுருதிதேர் குரவன்.
25
   
  குரவன் வாய்மையி னாசஞ் சீவியுட் கொண்டு
கரவி லாவிசு வாசமெய் யன்பொடு கவினி
விரவி யோங்கலின் வேதியர் விண்ணுல காளும்
புரவ லன்றிரு வடித்துணை பழிச்சினர் புகல்வார்.
26
   
  எந்தை நூனெறிக் கிடையிடை யெதிர்ந்தெமைத் தெருட்டி
அந்த மில்பர மானந்த மடையுமா றளித்த
விந்தை யாயபே ருதவியை வியந்தனு தினமுஞ்
சிந்தை யாரவுள் ளுவதலா லென்செய்கேஞ் சிறியேம்.
27
   
  பொய்வ குத்தபூ மாயமும் புலைமையும் போகத்
தெய்வ நிண்ணயந் தெரித்தனை ஜீவர க்ஷைக்காம்
மெய்வ குத்தனை மேல்விளை வனவெலாம் விரித்தாய்
உய்வ ழிப்படுத் துதவிமற் றிவற்றின்வே றுளதோ.
28
   
  ஒவில் பல்பெருந் துன்பமிக் குடற்றினு முருத்துப்
பாவ காரியர் செகுப்பினுந் தீவழிப் படரேம்
ஜீவ ரக்ஷணை தருகிறிஸ் தியேசுவே ஜீவன்
சாவு மூதிய மென்றொருப் பட்டனந் தக்கோய்.
29
   
  வாழி யையநீ புரிதிருப் பணிவிடை மல்கிப்
பாழி யம்புவி முழுவது மிரக்ஷணைப் பயன்கொண்
டூழி யூழிநின் றுயர்கவென் றுளங்குவிந் தேத்தி
ஆழி யானகர்க் கேகுது மருள்விடை யென்றார்.
30
   
  அண்டர் நாயகன் றிருவரு ளாக்கமு மடியார்
கொண்ட நல்வயி ராக்கியமுங் குணித்தருட் குரவன்
மண்டு மன்பினா சிகள்சொலி விடுத்தனன் மரபிற்
றொண்ட ரஞ்சலித் தேகினர் சுருதிமார்க் கத்தில்.
31