பக்கம் எண் :

353

 

                    வேறு.

 
   
  மீயுயர் கதியை நாடி வேதநூ னெறியிற் செல்லுந்
தூயரைக் கெடுப்பா னெண்ணித் துணிந்துபே யேல்செபூலாம்
பேயினத் தரச னூகித் தியற்றினன் பிறங்க மேனாள்
மாயசூ னியப்பண் டங்கண் மலிந்தவிம் மாயச் சந்தை.
63
   
  அலகறு நிதியுத் யோக மாளுகை மகிமை பட்டம்
இலகுபொன் வெள்ளி யில்ல மிசைதன தானி யங்கள்
பலகலன் வாக னாதி படைக்கலந் தவிசு டம்பம்
உலகசம் பத்துல் லாச முயர்குலப் பெருமை மேன்மை.
64
   
  பலகலை ஞானோ பாயம் பகட்டுரை பஞ்ச தந்த்ரம்
அலகிலாச் சூது வஞ்ச மபகட மபத்தா பாசங்
கலகமிச் சகமே மாற்றங் கள்ளங்கை தவம்வா சாலங்
குலகுறி யடையா ளங்கள் குசோத்தியங் குதர்க்கங் கோட்டம்.
65
   
  மந்திர வித்தை யட்ட மாசித்தி மாய வித்தை
எந்திர வித்தை கண்கட் டிந்திர சால வித்தை
தந்திர வித்தை யோகந் தருவித்தை கருவின் வித்தை
விந்தையா ரோப வித்தை வெகுவித விநோத வித்தை.
66
   
  உரைவிதந் தனைய வாய வுலப்பிலா மாயப் பண்டந்
தரைவளம் படுக்கு மாயச் சந்தையித் தகைமைத் தொன்றோ
வரைவரை போலத் தொக்கு மலிந்தமா பாவப்பண்டம்
விரைவினி லழிந்து தோன்றி விலைப்படும் வைக றோறும்.
67
   
  வித்தகக் கலைப்ப யிற்சி மேதையாத் துமவி சாரம்
உத்தம ஞான நன்மை யுண்மைநல் லுணர்ச்சி தேவ
பத்தியுள் ளன்பு சாந்தம் பவித்திரந் தயைகண் ணோட்டஞ்
சித்தநற் குணநற் செய்கை ஜெபதப விரதஞ் சீலம்.
68
   
  முத்திசா தனங்க ளாக முதுமறை திகழ்த்திக் காட்டும்
இத்தகு வனப்பு வாய்ந்த விரும்பொரு ளெவற்றொன் றேனுங்
குத்திரம் பயிலு மாயக் கடைதொறுங் கோடி செம்பொன்
வித்தினுங் கொளக்கிட் டாது விடமன்றித் தருமோ நாகம்.
69
   
  அவந்தரு திருவி னாய வாவணத் தணிகொள் வீதி
நிவந்திரு பாலுந் துற்றி நிலவுவர்த் தகசா லைக்குள்
நவந்திகழ் மாய சால நயந்துவீற் றிருந்தெந் நாளும்
உவந்துல கரூந்த வூட்டி யுயிர்ப்பலி கொள்ளு மன்றே.
70