பக்கம் எண் :

36

     (பொ - ரை) வைதீத நலம்பெருகிய பெண்டீரோடும்
பிள்ளைகளோடும் புருஷரானவர்கள் புஷ்பவாசனை பரிமளிக்கின்ற
சோலையினிடத்து (நற்கிரியை பரிமளிக்கின்ற .குக்கிராமங்களில்)
பரிசுத்த கடவுளரசனுக்குத் திருப்பணிவிடை புரிகின்ற பிரதிதின
ஊழியங்கள் மிகுந்திருக்கும். ஆதலால் அவ்விடத்துக் கிருபையாகிய
கருமேகம் வந்து படியும்.

 
   

மூசு பைம்புயன் முயங்கு சோலைவாய்
ஆசி யம்பனி யலருந் தண்டலை
காசில் ஜீவபுஷ் கரிணி யாடுவார்
தேசு மல்கெழிற் றேகங் கூடுவார். 27

     (பொ - ரை) நெருங்கிய பசுமையான மேகங்கள் தவழும்
சோலையினிடத்து ஆசீர்வாதம் என்னும் பனித்துளிகள் திகழ்கின்ற
விருட்சக் கூட்டங்களுக்கிடையில் குற்றமற்ற ஜீவ புஷ்கரிணியென்னுந்
தீர்த்தத்தில் ஸ்நான மாடுகின்றவர்கள் அதின் பலனாக தேஜஸ்
பொருந்திய அழகிய தேகத்தைப் பொருந்துவார்.

 
   

துன்று காவகச் சூழ லெங்கணும் மன்ற லார்ந்ததண் மலர்ப்பொ தும்பரும் தென்றல் வந்துவந் துலவுஞ் செவ்வியாற் பொன்று வாரெலா மடைவர் புத்துயிர். 28

     (பொ - ரை) நெருங்கிய பூங்காவனமாகிய அவ்விடமெங்கும்
வாசனை பொருந்திய குளிர்ந்த புஷ்பங்களோடு கூடிய சோலைகளில்
தென்றல் காற்றானது வந்து வந்துலவுகின்ற தன்மையால்
மரித்தோரெல்லாம் புதிய உயிரை அடைவர்.

 
   

நாட ருந்திரு நாட்டு வைபம்
ஊட றிந்தறிந் தும்ப ரின்னிசை
பாடு வார்முழு துணரற் பாலரோ
வாடு மானிடம் வகுப்ப தெங்ஙனம். 29

     (பொ - ரை) அறிவதற்கு அருமையாகிய திருநாட்டின்
வைபவங்களை இடைக்கிடையே அறிந்தறிந்து தேவதூதர்கள் இனிய
கீதங்களைப் பாடுவர். அவர்கள் தாமும் அவற்றை முழுவதும்
உணரத்தக்கவர்களோ? அங்ஙனமாயின் வாடுந் தன்மையையுடைய
மானிடர் அவற்றை வகுத்துரைப்பது எங்ஙனம்?