பக்கம் எண் :

37

 
   

                    திருநகரச் சிறப்பு

நித்தியமாய்ப் பூரணமாய் நின்மலமா யானந்த
      நிலையமாகச்
சத்தியஞா னந்தருமந் தயைசாந்தம் பரிசுத்தஞ்
      சர்வசத்தி
இத்தகைய வனந்தகலி யாணகுணத் திறைமகிமை
      யிலங்குந்தானம்.
முத்திநக ரெனத்திகழ்த்தி முதிய திரு வருட்சுருதி
      மொழியுமனறே.                     30

     (பொ - ரை) நித்தியமாய், பூரணமாய், நிர்மலமாய், ஆனந்தத்துக்
குறைவிடமாகி, சத்தியம் ஞானம் தர்மம் தயவு சாந்தம் பரிசுத்தம் சர்வ
சக்தி என்னும் இவ்வகைப்பட்ட அளவில்லாத கல்யாண
குணங்களையுடைய கடவுளினது மகிமையானது விளங்குகின்ற
ஸ்தானத்துக்கு மத்தி நகரென்று பழமையாகிய திருவருள் வேதம்
பெயர்கூறும்.

 
   

வாக்குமன மெட்டாத பரமசுகா னந்தபத
     மகத்துவத்தின்
ஆக்கமெடுத் துரைப்பவரா ரறிபவரா ராருமில
     ராயபோழ்துங்
காக்கைமனை பிறையென்று காட்டுதல்போ லருள்வேதங்
     காட்டுங்கூற்றை
மீக்கிளரு மாசையினா லொருசேரத் திரட்டியிங்கு
     விளம்புகின்றாம்.                        31

     (பொ - ரை) மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாத பரம
சுகானந்த மகத்துவச் செல்வத்தை எடுத்தச் சொல்லக்கூடியவர் யாவர்?
அவ்வாறு சொன்னபோதிலும் அதை அறியக்கூடியவர் யாவர்?
ஒருவருமேயில்லை. அப்படியானாலும் சந்திரப் பிறையானது
காகத்தினுடைய கூட்டைப்போலிருக்கிறதென்று சொல்வதுபோல
நமக்கருளப்பட்ட வேதம் காட்டுகின்ற விஷயத்தை என்னிடத்தில்
மேன்மேலும் எழும்பி வளருகின்ற ஆசையினால் ஒன்றாகத்
திரட்டி இங்கு விளம்புகின்றேன்.

 
   

முத்திநகர் பரமபதந் திருநாடு திருநகர
     மோக்ஷம்வீடு
நித்தியவா னந்தபத நித்தியஜீ வக்கழக
     நிகிலமூலம்
உத்தமமங் களஸ்தான முன்னதமண் டலம்பரமா
     காயத்துச்சி
சத்யமன்றம் புனிதமன்றம் தேவால யம்பரம
     சந்நிதானம்                           32