பக்கம் எண் :

381


6. ஜென்மதரித் திரத்தழியாச் செல்வ மோங்கச்
    சிறுமையிலே மகிமைநலந் திகழ்ந்து தோன்ற
வன்மரணந் தனினின்று நித்ய ஜீவன்
    மல்கவரு ணீதிமுறை வழுவா வண்ணந்
தன்மவுரு வெடுத்தகும ரேசன் றன்னைத்
    தற்பரமா யகிலசரா சரங்களொன்றும்
இன்மையிலே தோற்றுவித்த வீசன் றன்னை
    யென்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.
 
7. அலகைதலை நசுக்கியபே ராற்ற லானை
    யவித்தையிரு ளறுத்தொளிர்மெய்ஞ் ஞானத் தானை
உலகமயக் கொழித்திரக்ஷை யுதவி னானை
    யுத்தமசற் குணத்தானை மமையத் தெம்மை
விலகியுயி ருடலைவிடு மமையத் தெம்மை
    விலகாது விசுவாச விளக்கைத் தூண்டி
இலகுதிரு வடிநீழ லிருத்து வானை
    யென்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.
 
8. தம்மாவி யினைந்துபெருந் துயரந் தாங்கித்
    தண்ணறும்பூங் காவிலொரு தனியா மத்தில்
விம்மாவுள் ளுடையாநெட் டுயிர்ப்பு வீங்கி
    மெய்புழுங்கி வெங்குருதி வெயர்வை சிந்தி
அம்மானை விளித்திறைஞ்சி யலக்க ணுற்ற
    வருந்தவத்தின் பெருந்தகையை யருளின் வாழ்வை
எம்மாவிக் கினியானை யெய்தி நாயே
    யென்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.
 
9. பொல்லார்முண் முடிசூடிக் கோல்கொண் டோச்சப்
    பொழிகுருதி யுடனனைப்பப் போதம் யாதும்
இல்லாமன் னவன்கொலைத்தீர்ப் பிசைந்து கூற
    வெருசலே நகர்கடந்து கொல்க தாவிற்
செல்லாநின் றருகிரண்டு திருடர் நாப்பண்
    சிலுவைமரத் தறையுண்டு செயன்மு டிந்த
தெல்லாமென் றாவிவிட்ட விறைவன் றன்னை
    யென்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.
 
10. தண்ணளியங் குரித்தெழும்பி யன்பு மூலந்
    தாரணிக்குள் ளுறவூன்றித் தயைமூ டாகி
நண்ணுமிரு தத்துவக்கோ டார்ந்து தூய
    நல்லுரையாந் தழைமல்கி நன்மை பூத்துப்
புண்ணியங்காய்த் தருள்பழுத்துப் பரமா னந்தப்
    புத்தமுதங் கனிந்துகதி பொருந்தி நிற்கும்
எண்ணருநித் தியஜீவ கற்ப கத்தை
    யென்றுகொலோ கண்குளிரக் காணு நாளே.
   
 

             தேவாரம் முற்றிற்று.

          சிறைப்படு படலம் முற்றிற்று.