பக்கம் எண் :

391

 
  நான்காவது : ஆரணியபருவம்
 
   
 
      நம்பிக்கை நன்னெறிபிடித்த படலம்
 
   
  முத்தி கூடிய வருந்தவன் பத்தியின் மொய்ம்புஞ்
சுத்த மெய்விசு வாசமுஞ் சுகுணமுந் துகளில்
வித்த கக்கலை ஞானமுந் தீரமு மிளிர
எத்தி றத்தரும் விதந்துரை யாடின ரெங்கும்.
1
   
  மாய சூனிய வர்த்தகக் குழுக்கள்யாம் வதைத்த
தூயன் றூயசெங் குருதியின் கூக்குரல் சுடர்வான்
தோயின் வெங்கனல் சொரிந்திவூ ருஞ்சுடு காடாய்த்
தீயு மென்செய்தே மென்றகங் கலங்கினர் திகைத்து.
2
   
  புகரி லாவொரு புனிதனை வதைத்துயிர் போக்கி
நிகரி லாப்பழி சுமந்தன ரிந்நகர் நீசர்
ககன வேந்தொரு கணத்திடைக் கவிழ்ப்பர்மற் றென்னாப்
பகரும் ஜீவசான் றகப்பறை முழக்கியார்ப் பரித்தான்.
3
   
  அனைய சத்தமுற் றாய்ந்தன னந்நகர் மாயம்
புனையு மாவணத் தொருசிறை வர்த்தகம் புரிந்து
மனைநி ரம்பிய வாழ்க்கையன் வஞ்சனை மலிந்த
வினைய னம்பிக்கை யெனப்பெயர் பெற்றிடு வெய்யோன்.
4
   
  ஜீவ சாக்ஷியி னல்லுரை செவிமடுத் திடலும்
ஆவ தென்னினிச் செய்வலென் றாவியிற் கலங்கித்
தேவ வெஞ்சினந் தணிப்பதோ செய்யுநற் கருமங்
கூவ னீர்குளிர்ப் பிக்குங்கொல் வாரிதி கொதிக்கின்.
5