பக்கம் எண் :

42

 
   

                     வேறு

வானர மியந்திகழ் மதில்வ ளைத்தவக்
கோனக ரெங்கணுங் குலவு ஜோதிய
பானுவின் குழுக்களைப் பத்தி செய்தென
மேனிலை மாளிகை விதம்பல் கோடியே. 43

     (பொ - ரை) பரலோகத்துக்குரிய மகிழ்ச்சி விளங்குகின்ற
மதில்களால் சூழப்பட்ட அந்த இராஜ நகரத்தில் எவ்விடத்திலும்
பொருந்திய ஜோதியையுடையனவாய், சூரியக் கூட்டங்களை வரிசை
வரிசையாய் அடுக்கியதுபோல மேல் நிலைகளையுடைய விதம் விதமான
மாளிகைள் கோடிக்கணக்காயுள்ளன.

 
   

மின்னையும் வெயிலையும் விரவி மேதகு
பொன்னினு மணியினும் புனைந்த வோவெனப்
பன்னிற மாடங்கள் பந்தி பந்தியா
உன்னதத் திமைப்பன வுலப்பில் கோடியே.
44

     (பொ - ரை) மின்னலையும் வெயிலையும் ஒன்றாகக் கலந்து,
இவை உயர்ந்த பொன்னினாலும் ரத்தினத்தினாலும் இயற்றப்பட்டனவோ
என்று சொல்லும் வண்ணம் பல நிறங்களையுடைய மாளிகைகள் வரிசை
வரிசையாய் உன்னதத்தில் பிரகாசிப்பன அளவில்லாத
கோடிக்கணக்காயுன்ளன.

 
   

வயின்றொறுஞ் சந்நிதி மகிமை வாய்ந்தெழில்
குயின்றுபன் மணிக்குலக் குவையி னாக்கிய
வியன்றட மாளிகைத் தலங்கள் விட்புலம்
பயின்றொளி கிளைப்பன பற்பல் கோடியே. 45

     (பொ - ரை) எங்குந் தேவ சந்நிதானத்து மகிமைபொருந்தி அழகு
வாய்ந்து பலவகைப்பட்ட இரத்தினக் குவியல்களைப் பதித்து
இயற்றப்பட்ட பெருமை தங்கிய விசாலமான மாளிகைகள்
விண்ணுலகத்தினிடத்தைப் பொருந்திப் பிரகாசத்தை வீசுவன அநேக
கோடிக்கணக்காயுள்ளன.

 
   

புண்ணிய நலமணி பொருத்திப் பொற்புறு
தண்ணளிக் குருதியன் பளைந்த சாந்தினே
மண்ணுல கருக்கென வகுத்த ரக்ஷணை
கண்ணிய மாடங்கள் கவினுங் கோடியே. 46

     (பொ - ரை) புண்ணியம் முதலான நவரத்தினங்களைப் பொருத்தி,
அழகுற்ற குளிர்ந்த கிருபையினால் சிந்திய இரத்தம் அன்பு என்பவைகள்
அளையப்பட்ட சரந்தினால் மண்ணுலகத்தவருக்கென்று கட்டப்பட்ட
ரக்ஷண்யமாடங்கள் கோடிக்கணக்கானவை பிரகாசிக்கும்.