|
கோனருள் பணிகுறிக் கொண்டு ஞற்றிவாழ்
ஊனமில் லாவிகட் குரிமை பூண்டுயர்
வானுல கேழென வகுத்துக் காட்டிய
மேனிைலைக் கோபுரம் விவித கோடியே. 47
|
(பொ
- ரை) பரலோக இராசன் ஆஞ்ஞாபிக்கின்ற
திருப்பணிவிடைகளையே தம்தொழிலாகக் கொண்டு அவற்றை
நிறைவேற்றி வாழுகின்ற கெடுதலில்லாத ஆவிகளுக்குரியனவாய்,
உயர்ந்த வானலோகமானது ஏழு என்று வகுத்துக் காட்டுவனவாய்
உள்ள மேனிலைக் கோபுரங்கள் விதம்விதமான கோடிக்கணக்கானவை.
|
சொல்லரு முத்திமா நகருஞ் சூழ்ந்துள
எல்லையும் வான்சுட ரியங்கு கிற்கில
மல்லல்கூர் தம்பிரான் மகிமை யின்சுடர்
புல்லிநின் றவிரொளிப் பிரபை போர்க்குமால். 48
|
(பொ
- ரை) சொல்லுதற்கரிய முத்திமா நகரத்திலும் அதைச்
சூழ்ந்துள்ள எல்லைகளிலும் வானஜோதிகள் இயங்குவதில்லை. ஏனெனில்
வல்லமைபொருந்திய தம்பிரானுடைய மகிமையின் சுடர் அவ்விடங்களில்
பொருந்தி நிலைபெற்று நின்று பிரகாசிக்கின்ற தனது ஒளியினால்
அவற்றைப் போர்க்கும்.
|
ஜீவமா
ளிகைத்திரு முன்றிற் றேங்கிய
ஜீவநீர் நிலைபெருக் கெடுத்துத் திவ்விய
ஜீவமா நகரத்தைச் செழிப்பித் தூடுரீஇ
ஜீவகோ டிகளுய ஜெகத்திற் பல்குமால். 49
|
(பொ
- ரை) ஜீவமாளிகையின் திருவாசலில் தேங்கிய
ஜீவநீர்நிலையானது பிரவாகங்கொண்டு திவ்யமயமாகிய ஜீவமாநகரத்தைச்
செழிப்பித்து, அதை ஊடுருவிச்சென்று, ஜீவகோடிகள் உய்யுமாறு
இவ்வுலகத்தில் பெருகும்.
|
ஜீவபுஷ்
கரிணியின் றீரத் தோங்கிய
ஜீவகற் பகமெனுந் தெய்வ மாத்தரு
ஜீவநா யகனருள் பழுத்த செவ்வியில்
ஜீவமாக் கனித்திரள் செறிந்து மல்குமே. 50
|
(பொ
- ரை) ஜீவபுஷ்கரிணியின் தீரத்தில் ஓங்கி
வளர்ந்திருக்கின்ற ஜீவ கற்பகமென்கின்ற தெய்வீகத் தன்மையையுடைய
பெரிய விருட்சமானது ஜீவநாயகனாகிய எம்பெருமானது திருவருள்
பழுத்தல்போன்று ஜீவ கனித்திரள்கள் நெருங்கி ஏராளமாய்ப் பெருகி
இருக்கும்.
|