பக்கம் எண் :

434

சந்த னந்தந்தி கழுந்த டங்களில்
சந்த னந்தந்தி கழ்தடஞ் சாரலில்
வந்த னந்தந்தி மாலையுங் காலையும்
வந்த னந்தந்தி றைவனை வாழ்த்துவார்.

24
 
மலையெலாம் புனிதஞ் செல்லு மருங்கெலா மகிழ்ச்சி தெண்ணீர்
நிலையெலாங் கருணை நீத்தம் நெறியெலா நீதி மார்க்கங்
கலையெலாஞ் சுருதி பேச்சுக் கனிவெலாந் தேவ பாஷை
தலையெலா மாசீர் வாதஞ் சார்பெலாம் பசும்பொற் கேணி.
25
 
மாதவப் பள்ளி தோறும் வரன்முறைத் தொழும்ப ரீட்டம்
பாதவப் புரைக டோறும் விழுக்கலை பனவ ரீட்டம்
மேதகு கழகந் தோறும் விழுக்கலை மழவ ரீட்டம்
போதலர் பொய்கை தோறும் புகரறு மகளி ரீட்டம்.
26
 
கள்ளவிழ் முல்லை யீன்ற கடிமுகை யனைய மூரற்
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்குதீங் குரலி னோடு
வள்ளலெம் மிளங்கோ மான்செம் மலரடி வழுத்தி யேத்தும்
தெள்ளிய மதுர கீதஞ் செவிமடுத் திடுமெப் பாலும்.
27
 
விருந்தெதிர் கொண்டு நாடி விழுத்தகு மரபி னோம்பிப்
பொருந்துமெய் யன்பிற் றூய போனக மளிப்பர் பல்லோர்
வருந்துவோர்க் குடையைத் தாங்கும் வண்கையி னுதவி நேர்ந்து
திருந்துநன் மதிகள் சொல்லித் தெருட்டுவார் தம்மிற் பல்லோர்.
28
 
பொருளெலாம் பொதுமை மேய புகழெலா மிறைமை நாடும்
அருளெலாஞ் செல்வ முள்ளத் தவாவெலா மறுமை யாக்கந்
தெருளெலா மான்ம போதஞ் செயலெலாந் திருத்தொண் டென்ப
மருளெலா மொழித்து நோற்கு மலைப்பிர தேசத் தோர்க்கே.
29
 
பெய்வது கருணை மாரி பெருகுவ தன்பி னீத்தஞ்
செய்வது தருமப் பைங்கூழ் திருந்துவ துயர்பே ரினபம்
உய்வது ஜீவ கோடி யோங்குவ தமலன் சீர்த்தி
தைவிக பரமா னந்த சைலப்பிர தேசத் தென்றும்.
30
 
மானந்தண் ணுமையா வண்டு பாண்செய மயில்க ளாடக்
கானந்தன் னவையாச் செய்ய கமலக்கண் களித்து நோக்கிப்
பூநந்து நறுந்தண் கொன்றைப் பொன்னணிப் பரிசு நல்கி
ஆனந்த சைல வேந்த னரசுவீற் றிருப்பன் மாதோ.
31