பக்கம் எண் :

441

நெறியறிந் தவாவை நீக்கி நிருமல வேந்தைக் கிட்டி
முறையறிந் தருளை வேண்டி முன்னிட்டு முடுகல் வேண்டும்
இறைதிருக் கரமே நும்மை யிறுவரை காக்கு மென்றாங்
கறியமற்றொன் றுண்டின்னும் வம்மினென்றழைத்துப் போனர்.

80
 
விண்ணுற மிளிர்ந்து தோன்றும் வித்தகத் தெளிவென் றோதும்
வண்ணவான் சிகரி யண்மி மறைவலீ ராடி யீது
புண்ணிய நகரைக் காட்டும் புதுமையைக் காண்மி னென்னாக்
கண்ணடி வாங்கி யுற்று நோக்கினர் கருத்துள் ளூன்றி.
81
 
விரிதரு பரமா காய வெளிதிகழ் பரம சீயோன்
கிரிமிசை யனந்த கோடி சூரியர் கிளர்ந்தா லென்னப்
பரவிய மகிமை யோங்கிப் பகிரண்டப் பரப்பை யெல்லாந்
தெரிதர விளக்கிக் காட்டுந் திவ்வியப் பிழம்பு கண்டார்.
82
 
மேனிமிர்ந் தெழுந்த ஜோதி கற்பக விருக்கம் போலும்
வானஜோ திகளு மண்ட கோடியு மரத்திற் றொக்க
கானனை விரிபூங் கொத்து காய்கனி முதல போலும்
வானுற நிவந்து நிற்கு மரபினைத் தெரியக் கண்டார்.
83
 
மொய்த்தெழு மகண்டா கார முழுச்சுடர்ப் பிழம்பின் முந்து
பத்தியிற் றமக்கு நேரே பவித்திர பரமா காய
வித்தக வெளியைக் கண்டார் விமலசந் நிதியி லுய்க்கும்
நித்திய ஜீவ வாயி லிதுவெனு நினைவுட் கொண்டார்.
84
 
வானக்கண் கொள்ளா தோங்கு வளரொளித் திரளைத் தீர்ந்த
ஞானக்கண் ணடியி னாடிக் காணவு நடுங்கி யஞ்சி
ஊனக்கண் வழுக்கிக் கூசி யொல்லைத்தம் மிமையை மூடித்
தானக்கண் விழுந்திறைஞ்சித்திசைநோக்கித் தாழ்ந்துசொன்னார்.
85
 
வாக்கினுக் கதீத மெங்கள் மனத்துக்கு மதீதம் ஞான
நோக்கினுக் கதீதம் நும்பால் நுவலுதற் கதீத மாக
மேக்குயர் முகடு முட்ட விளங்கிய பிரபை கண்டேம்
பாக்கிய நகரத் துள்ள பகுப்பொன்றுங் காணு கில்லேம்.
86
 
அண்ணலார் புனித மாய வக்கினிப் பிழம்பீ தென்கோ
எண்ணரு மகிமை ஜோதி யீதென்கோ விளங்கோ வீட்டும்
புண்ணியப் பொலிவே யென்கோ பொங்கிய பரமா னந்தங்
கண்ணிய நிலைய மென்கோ யாதெனக் கழறு கிற்பேம்.
87