|
மேலைநா ளிளவர சுயர்த்த வெல்கொடிக்
கோலினின் றுலகர்க்குக் குருதிச் சான்றுரை
ஞாலமீத் திகழ்த்திய நலங்கொ ளுஞ்ஜெய
சீலசங் கத்தொனி திகந்த முட்டுமே. 59
|
(பொ
- ரை) முன்னாள் அரசிளங்குமரனால் உயர்த்தப்பட்ட
ஜெயக் கொடி ஸ்தம்பத்தினின்று, உலகினர்க்கு எம்பெருமான் சிந்திய
இரத்தமாகிய சாட்சியை விளக்கிய நன்மைபொருந்திய வெற்றியைக்
குறிக்கும் பரிசுத்த சங்க நாதமானது திக்குகளின் அந்தத்தையும் சென்று
சேரும்.
|
வேறு
துன்பம்
யாதுமின் றாகத் தூய்தவர்
பொன்பொ லிந்தவப் புரவ லன்கழற்
கன்பு செய்துசெய் தழிவி லாதபேர்
இன்ப மெய்திவாழ்ந் திருப்ப ரென்றுமே. 60
|
(பொ
- ரை) பரிசுத்தமான தவத்தினையுடையோர் துன்பம்
யாதுமின்றி அழகு மிகுந்த அப்பரலோக ராஜனுடைய திருவடிக்கு
அன்பையே செய்து செய்து எப்பொழுதும் நித்திய பேரின்பமுற்று
வாழ்ந்திருப்பர்.
|
பகலி ராவெனும் பகலி லாதவப்
புகரில் வானநாட் டரசன் பொற்புறு
மகிமை யொண்கதிர் வனையு மாடையா
நகர வாணர்க்கு நலம்ப யக்குமே. 61
|
(பொ
- ரை) இஃது இரவு, இஃது பகல் என்னும் பாகுபாடில்லாத
.குற்றமற்ற வானலோகத்தரசனது அழகுபொருந்திய மகிமையின் பிரகாசம்
பொருந்திய கிரணங்களே நகரவாசிகளுக்கு அணியும் ஆடையாக
நலத்தை யுண்டாக்கும்.
|
முத்தி மாநகர் முழுதுந் தம்பிரான்
சித்தம் யாதது செய்து நிற்பதே
நித்தி யானந்த நிகரில் வாழ்வெனாப்
பத்தி செய்யுமாற் பரம சிந்தையாய். 62
|
(பொ
- ரை) அம்முத்திமா நகரத்தார் யாவரும் தம்பிரானுடைய
சித்தம் எதுவோ அதனைச் செய்துவாழ்தலே ஒப்பற்ற நித்தியானந்த
வாழ்வு என்று பரம சிந்தையோடும் பக்திசெய்வர்.
|