பக்கம் எண் :

47

   

அரசர் தம்பிரா னம்பொற் சேவடி
வரச ரோருகம் வழுக்தி யேத்திமும்
முரசு றாவிழா வணிகொள் முன்றில்வாய்
விரசு வாரன வரதம் விண்ணவர். 63

     (பொ - ரை) இராஜாதி ராஜனுடைய அழகிய பொன்போலும்
சிவந்த பாத தாமரைகளை வழுத்திக் துதித்து, கர்த்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் என்னும் மும்முரசுகளின் சத்தம் விட்டுநீங்காத
திருவிழா எடுத்தற் சிறப்பினையுடைய முற்றத்தினிடத்தே தினமுந்
தேவதூதர்கள வந்து விரைந்து நெருங்குவர்.

 
   

             வேறு

அற்புத ஜீவ கங்கை யாடுவ ரமர ராவார்
பொற்புறு ராஜ சேவை பொருந்துவர் புனித ராவார்
கற்பக நிழலிற் றங்கிக் களிப்பர்வான் கணங்க ளாவார்
தற்பரன் றொழும்பு செய்வர் தகைபெறு முத்த ராவார். 64

     (பொ - ரை) அற்புதம்பொருந்திய ஜீவகங்கையிற்படிவோர்
மரணமில்லாதவராவர். அழகுதங்கிய பரலோக ராஜனுக்குச் செய்யும்
சேவையைப் பொருந்தி நிற்போர் பரிசுத்தராவர். கற்பகவிருக்ஷ நிழலிற்
றங்கியிருந்து மகிழ்வோர் தேவகணங்களாவர். ஈஸ்வரனுக்குத்
திருத்தொண்டு செய்வோர் தகுதியினையுடைய ஜீவன் முத்தராவர்.

 
   

இறைபர லோக ராஜ்யத் தெழினல மெதிர்வோர்க் கென்றும்
பொறிபல வனந்த மாகப் புலனெலாம் புதுமைத் தாக
அறிதொறும் பரமானந்த வதிசயக் காட்சி யெய்தி
முறைமுறை துதித்துப் போற்றிப்புகழுவர் முனைவன் சீர்த்தி.
65

     (பொ - ரை) ஈஸ்வரனுடைய பரலோக ராஜ்யத்தின் அழகின்
நலத்தைக் காண்பார்க்கு எப்பொழுதும் பொறிகள் கணக்கில்லாத
பலவாகவும் புலன்கள் புதியனவாகவும்கொண்டு, அதனை அறியுந்தோறும்
அறியுந் தோறும் அவர்கள் பரமாநந்தத்தோடுகூடிய அதிசயக்காட்சியை
அடைந்து, ஈஸ்வரனுடைய கீர்த்தியை முறைமுறையாகத் துதித்துப்
போற்றிப் புகழுவர்.

 
   

அத்தனா ரருளி னாக்க மரகிளங் குமரன் காட்சி
வித்தகப் புனித வாவி விழுத்தகு சுமேதந் தூய
முத்திவீட் டறவோர் நட்பு முறைவழாத் தோத்ர கீதம்
இத்தகு பேறே யன்றோ வீறில்பே ரின்ப செல்வம். 66

     (பொ - ரை) ஈஸ்வரனது அருட்செல்வம், அரசிளங்குமரனது
திருக்காட்சி, ஞானமயமான பரிசுத்த ஆவி, மேன்மையினையுடைய
ஞானபலி, பரிசுத்த மோட்சவீட்டில் வசிக்கும் தருமவான்களின் நட்பு,
முறைதவறாத தோத்திரக்கீதம் ஆகிய இத்தன்மையான பேறுகள்தான்
முடிவில்லாத பேரின்பச் செல்வமெனப்படும்.

             பரமராஜ்யப்படலம் முற்றிற்று.
                 ________