பக்கம் எண் :

501

  ஓலிடு மரண வாற்றிற் கொருபுணை யேனு மின்று
பாலமு மின்று நீந்தும் பரிசினாற் கடத்தல் வேண்டும்
ஏலயா வேனோக் கென்ற விருவர்செல் வழியிற் செல்ல
ஞாலமீ தெவர்க்கு மென்று நம்பனுத் தார மின்றால்.

20
   
  நதிநிலை வினவு வீரே னம்பிமீர் நவிலக் கேண்மோ
சதிபுரி யாழ முண்டு தரிகொளுந் திடரு முண்டெம்
அதிபதி யருண்மே லுய்த்த விசுவாச வளவி னாமால்
மதிநிலை கலங்கீ ராகி மரணத்தைக் கடத்தி ரென்றார்.
21
   
                     வேறு.
   
  ஆய தேபுரி வாமென வருமறைக் கிழவர்
மேய வந்நதிப் பெருக்கினைக் கண்டுளம் வெருண்டு
தூய வக்கரைப் படுதுமோ வெனநிலை துளங்கிக்
காய முஞ்சலித் தினிச்செய லென்னெனக் கவன்றார்.
22
   
  கலைநி ரம்பிய மதியினன் கவன்றன னெனினும்
நிலைவ ரங்கிறஸ் தியேசுவென் னித்திய ஜீவன்
உலைவென் சாவுநல் லூதிய மெனங்கென வுரத்தான்
மலைது ளங்கினு மனந்துளங் காதமெய்ம் மறையோன்.
23
   
  நோக்கி னான்விசு வாசியி னகநிலை நூதலி
மீக்கி ளர்ந்தெழு முவகைய னம்பிக்கை விறலோய்
பாக்கி யம்மணித் துளதுகாண் படுகரூ டுருவி
ஊக்கி யக்கரைப் படுவதே கருமமென் றுரைத்தான்.
24
   
  சீரி தாமென விருவருந் திருப்பெருங் கருணை
ஆர வுண்டகந் தேக்கின ரானந்த பதவிப்
பேர ருட்கரை பிடித்துமென் றாவலிற் றுணிந்து
மார ணத்துறை யிறங்கினர் வஞ்சமின் மறையோர்.
25
   
  இறங்கி டுந்துறை நீத்துள தாதலி னிறங்கி
அறங்கி ளர்ந்தமெய் யாரணனாழத்தி னமிழ்ந்திக்
கறங்கு போற்சுழன் றகநிலை கலங்கியுள் ளுடைந்து
பிறங்கு நன்மதி திகைத்தனன் கானிலை பிசகி.
26
   
  ஆர ணத்துறை நீந்திய வருள்விசுவாசி
மார ணத்துறை முயங்கலும் வருந்தியுண் மறுகிக்
கார ணத்தணி முதல்வனைக் கருத்தினாற் றழுவிக்
கோர ணிப்படு திரையிடை முழுகிமுக் குளிப்பான்.
27