|
சரமெலாம்
விகற்பொன் றின்றித் தத்தமி லுறவு கொண்டு
நரமனோ கரமாய்க் கிட்டி நன்குகுற் றேவல் செய்யும்
தரமுறு புற்பூண் டாதி தருக்குலம் பயன்றந் தோங்கும்
பரவுல கிதுவென் றுள்ளப் பாரெலாம் புனித மல்கும்.
|
10 |
|
|
|
|
பாபமே
யில்லை பாவ பயங்கர மில்லை தேவ
சாபமு மில்லை சாவுஞ் சஞ்சலத் தொடர்பு மில்லை
கோபமும் பகையு மில்லை குணதோஷ மில்லை மிக்க
ஆவலு மில்லை பூரு வாச்சிர மத்தர்க் கம்மா.
|
11 |
|
|
|
|
அரசனைச்
சிந்தை யுள்ளி யநுதினங் காலை மாலை
வரசரோ ருகப்பொற் பாதம் வழுத்துவர் வணங்கி யேத்தித்
திரைசெறி கடல்சூழ் வைப்பின் சீர்மைகண் டதிச யித்து
விரசுவர் விண்ணோர் தம்பால் வித்தகம் பயில்வர் மாந்தர்.
|
12 |
|
|
|
|
பூதலப்
பொருள்க ளெல்லாம் பொதுவன்றிச் சொந்த மில்லை
ஆதலிற் கொள்வா ரில்லர் கொடுப்பவ ராரு மில்லர்
போதர நிறைவே யன்றிப் புகலவோர் குறையு மில்லை
ஊதிய நயநஷ் டங்க ளொருவர்க்கு மொன்று மில்லை.
|
13 |
|
|
|
|
பிணிமூப்புச்
சாக்கா டென்னப் பேச்சினு மறியார் தம்மைத்
தணிவரும் வருத்தந் துன்பஞ் சஞ்சலித் தழுபுன் கண்ணீர்
புணர்வதோ வென்று மின்றாய்ப் பொறிபுலன் புனித மாமெய்
உணர்வொடு பத்தி செய்வா ரும்பரும் வியக்க மாதோ,
|
14 |
|
|
|
|
அச்சுதா
னந்த ராகி யகிலலோ கமும்பு ரக்கும்
சச்சிதா னந்த வேந்தன் றமைக்கிட்டித் தமைக்கேட் பிக்கும்
உச்சித மதுர வாக்கைச் செவிக்கமு தாக வுண்டு
நிச்சலும் பரவிப் போந்து நிலவுவர் பணிமேற் கொண்டு.
|
15 |
|
|
|
|
பைங்கழை
நிறுவி மேலாப் படர்தருச் சினைபொ ருத்தித்
துங்கமட் சுவரை யாக்கித் துணர்த்தபூங் கொடியால் வேய்ந்து
பொங்கரிற் புதுமை யாகப் புனைந்தசித் திரப்பூ மன்றில்
அங்கண்வா னகங்கொண் டாட வறங்குடி புகுத்தி வாழ்வார்.
|
16 |
|
|
|
|
வருந்திமெய்
சலியார்வேலை வரன்முறை செய்து செய்து
திருந்துவர் சுனைகான் யாறு சிந்துநீர் வாவி யாடி
அருந்துவர் கந்த மூல பலங்களை யமரர் நாட்டின்
விறாந்தெதிர் கொண்டு போற்றிப் பூசனை விருப்பிற்செய்வார்.
|
17 |