பக்கம் எண் :

522

  அதிபதி யாந்த்ரி யேக வாண்டகை சீரெம் மோடு
துதிபகர்ந் திரைமி னென்னச் சுரமண்டலங்க ளிந்து
கதிபெறு மரபி னாக்கங் கவினிமங் களமே மல்க
மதிகதி ரனைய ஜீவ மௌலியும் புனைந்தார் வாழி.

100
   
  முடிபுனை காட்சி கண்டேன் முறைவழா தரசற் போற்றிப்
படியினுக் கீட்டி வைத்த பரமசந் தோஷந் துய்ப்பான்
கடிமணக் கோலத் தோடிக் ககனமண் டபத்துட் டூய
வடிவுடை யெமரீர் வம்மோ வம்மென்ற வாக்குங் கேட்டேன்.
101
   
  மங்களகரமா யெங்கும் வானதுந் துமிக ளோடு
சங்கையில் புனித நாத மணியொலி தழைத்த தாவாப்
பொங்கிய பரமா னந்தப் புதுக்களி யாட்டு மல்கி
அங்கண்வா னகர மெங்கு மருங்கடி விழக்கொண் டன்றே.
102
   
  கதிமிகுசிறப்புப் பெற்ற காவலர் பலரெங் கர்த்தர்
அதிபரி சுத்தர் சுத்த ரதிபரி சுதத ரென்னா
விதிமுறைப் படிசல் லாப மிழற்றிசை திகழ்த்திப் பாடிச்
சதிமுறை தழுவித் தூங்கத் தகைபெறு நடனஞ் செய்தார்
103
   
  திருந்துவே தியருந் தேவ சங்கமுஞ் சிந்தை யாரப்
பெருந்தகை யாய தேவ பிதாவுக்குங்குமர னார்க்கும்
பொருந்திய தேவா விக்கும் புரையறு மகிமை யாற்றல்
அருந்துதி யென்று மல்க வாமெனென் றிசைத்தார் பல்கால்.
104
   
  ஒழுகொளி மௌலி சூடி யுத்தமாத் துமிகள் தம்மோர்
அழகிய மணவா ளன்பா லவாவொடு செல்லுங் காட்சி
விழிகளிப் புறநோக் குங்கால் விரிகதி ரனந்தந் தொக்குப்
பொழிகதி ருகுத்தா லென்னப் பொலிந்தது மகிமை ஜோதி.
105
   
  ஜோதியின் பிழம்பு போர்ப்பத் துணுக்குறீஇத் துயிலா நின்ற
மீதுயர் கிரியின் சாரல் விழித்தனென் விமல ராஜன்
பாதபங் கயம்ப ராவிப் பவித்திர தரிச னத்தைக்
காதலா யகம்பொ றித்துக் காட்டினே னுலகுக் கம்மா.
106
   
  சிந்தையாத் திரையி னேர்ந்த திவ்விய சரித மற்றிவ்
விந்தையைக் கருத்தி லுய்த்து விழுத்தகு நோன்பு பற்றி
அந்தண ராகி வேத வறநெறி வழுவார்க் கெல்லாஞ்
சந்தத மழிவில் பேறு தருவர்நம் பரம தந்தை.
107