பக்கம் எண் :

523

                   வேறு.
 
வாழி வாழயோர் திரித்துவ நாமத்தின் மகிமை
வாழி மன்னுயிர்க் கிரக்ஷணை வழங்கு வண்சுருதி
வாழி மெய்யடி யார்குழுஉந் திருச்சபை மரபு
வாழி மெய்க்குரு பரம்பரை யூழிய மாண்பே.
108
 
                   வேறு.
மல்குக ஜீவர்க் கெல்லா மதிநலந் தருமெய்ஞ் ஞானம்
புல்குக வறங்க ளெங்கும் புரையிலாச் செங்கோ லோங்கி
வெல்குக மெய்மை யென்றும் விளங்குக கல்வி செல்வம்
பல்குக வுலக மெங்கும் பரம்புக நன்மை மாதோ.
109
 
நன்றுல கனைத்துந் தந்து நலம்பெறு தந்தை யாக
வென்றிசேர் மைந்த னாக விமலாவி யாக வொன்றும்
மன்றல்சேர் தியே கற்குமகிமையுங் கனமுமாறா
தென்றுமுள்ளனபோ லின்று மென்றுமுண் டாக வாமென்.
110
 
           சுவர்க்காரோகணப் படலம் முற்றிற்று.
 
            இரக்ஷணிய பருவம் கலி, 250.
 

                    தேவாரம்.
 
        I. உண்மை வற்புறுத்தல் (பண், பழம் பஞ்சுரம்)
 
1. தொக்கபாவமன் னிப்புநித்திய ஜீவநன்மையுஞ் சுகிர்தமும்
மிக்கபேரின்ப வீடுநங்கிறிஸ் தியேசுவைவிசு வாசிக்கிற்
கைக்குள்வந்ததிங் கையமொன்றிலை கண்டுகேட்டுணர்ந்
                                         துலகுளீர்
தக்கவாறுநன் றாய்மின்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே
.
 
2. தேவதேவத்ரி யேகதெய்விக ஜேசுவின்றிரு நாமமே
ஜீவரக்ஷணை நல்குதிவ்விய சீலமார்திரு மந்திரம்
ஆவதன்றிமற் றில்லைவேறிதை யாயுமின் விரைந் துலகுளீர்
தாவரும்பர மார்த்தரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
 
3. இம்பர் மெய்ப்புரு ஷார்த்தமீட்டுதற் கேற்றநல்வழி யீசனை
நம்பியன்புசெய் வார்க்கெலாமழி யாதபேரின்ப நன்னிதி
உம்பர் நோக்குசன் மார்க்கமாதியு ணர்த்துசற்குரு வுலகுளீர்
தம்பிரான்கதி கூட்டுரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
 
4. எமையுயக்கொண்ட வீசனாதிதொட் டெழுதுவித்தது மிம்பரிற்
சிமையத்தேயலர் தீபம்போன்றுள திருச்சபைப்குய்த்துத்
                                        தெருட்டலும்
உமையடுத்தடுத் துண்மைகூறிவற் புறுத்திநிற்பது முலகுளீர்
சமையபாஷகர னாமிரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.