பக்கம் எண் :

75

தக்கமே னிலைச்சே ரின்றாற் றானிய வருக்கஞ் சேர்த்து
வைக்கவென் றெண்ண மிட்டான் வல்லையே களஞ்சி யத்தை
இக்குவ லயம் வியக்க வியற்றியென் சம்பத் தெல்லாந்
தொக்குவைத் தநேக காலந் துய்த்துவாழ்ந் திருப்ப னென்னா.
105
 
  முன்னிலை யுணரான் பின்னே முடுகிடு மறுமை யோரான்
தன்னையு மறந்தா னாகித் தடந்துயில் கொள்ளுங் காலை
முன்னவ னின்றிராவே முடியுமுன் வாழ்நா ளென்னில்
உன்னிரு நிதியம் பேதா யாரதா முரைத்தி யென்றார்.
106
 
  ஆதலாற் பரம ராஜ னருட்டிர வியத்தைப் பெற்று
தீதெலா மகல நோற்பிற் சிந்தனை பிறிதொன் றில்லை
ஈதெலாஞ் சோர விட்டிவ் விகபோக நச்சி வாணாட்
போதெலாங் கழிய நிற்கும் புல்லியர் கதியி தாய்மின்.
107
 
  ஒருபொழு தேனும் வாழ்வ தறிகிலா ருலக மாந்தர்
கருதுப கோடி யல்ல பலவென்று கருத்திற் காட்டுந்
திருவரு ளுரையு மெண்ணார் சிற்றின்பப் படுக ராழ்ந்து
பொருவரும் வாணாள் வீணே போக்குதல் புலமைத் தாங்கொல்
108
 
  ஒருவனோர் திராக்ஷத் தோட்டத் தூன்றின னத்தி யொன்றை
பெருமர மான போதுங் கனிகொடாப் பெற்றி நோக்கித்
திருவனிந் நிலங்கெ டுக்குந் தருவிதைச் சிதைத்தி யென்னாப்
பொருவருந் தோட்டப் பாது காவலன் புரிவிற் கூறும்.
109
 
  ஆண்டகா யின்னு மோராண் டளவும்யான் சுற்றிக் கொற்றி
வேண்டுர மிட்டுத் தக்க விதம்பல பருவஞ் செய்துங்
காண்டகு கனிகொ டாதேற் கட்டளை யிட்ட வாறு
கீண்டெறிந் திடுவ னென்று கிளந்தனன் றெளிந்து கொண்மின்.
110
 
  ஒருவனன் புடைய தந்தைக் கோரிரு புதல்வ ருள்ளார்
இருவரி லிளையா னைய வென்னொரு பாக மெற்குத்
தருகவென் றிரந்து கேட்பத் தந்தைதன் னுரிமை யாவும்
நிருவிகற் பாகப் பங்கிட் டுதவின னேர்மை யாக.
111
   
  கைப்பொருள் கண்டான் றந்தை கரைந்தசொற் பொருளைக்
                                         காணான்
மெய்ப்பொரு ளறியா னுள்ளம் விழைந்தசிற் றின்ப மாயப்
பொய்ப்பொரு ணச்சி யோடிப் புறம்புபோய்த் தந்தை யீந்த
அப்பொரு ளிழந்தா னந்தோ வகதியா யினன்சின் னாளில்.
112