பக்கம் எண் :

85

          
யாத்திராரம்பப் படலம்
 
     
  இடுக்குறு வாயில்சென் றெய்தி டாமுனம்
தடுக்கருந் தடையயற் சாரு மோவென
நடுக்குறு மாயினு நாயினே னைக்கை
விடுக்குமோ விறையென வெருட்சி நீங்கினான்.
1
   
  கண்ணிலா னிருவிழி காணப் பெற்றபோல்
மண்ணக விருள்கெட வயங்கு மாச்சுடர்
நண்ணிட மறிந்துள மகிழ்ந்து நாட்டம்வைத்
தெண்ணமற் றின்றியே விரைவி னேகினான்.
2
   
  போவது கண்டெமைத் துறந்து போதல்நன்
காவதோ திரும்புகென் றாகு லத்துடன்
கூவினர் மனைமகார் குறிக்கொ ளாதவன்
ஜீவனே ஜீவனே யென்னச் சென்றனன்.
3
   
  மூண்டெரி வளைந்திட முடுகி யிற்புறந்
தாண்டிவீழ்ந் தாருயிர் தப்பி நின்றுபின்
வேண்டுவ முயலுவா ரலது வெண்மையால்
மாண்டழிந் தொழிவரோ மனைம காரொடும்.
4
   
  பற்றியாங் கொணர்வமென் றிருவர் பன்னிப்போய்
உற்றனர் விரைந்துசென் றுவந்து வேதியன்
கொற்றவன் றிருநகர் குறித்த கொள்கையோ
மற்றுநுங் கருத்தெது வழுத்து வீரென்றான்.
5
   
  இன்றுநீ மனந்துணிந் தெமைவிட் டேகிடில்
ஒன்றிடும் பெருந்துய ருண்மை யாதலால்
சென்றிடே லெம்முடன் றிரும்பு வாயெனில்
நன்றுனக் காம்பெரு நமர்க்கு நல்லையால்.
6
   
  அரும்பெறன் மக்களை யாவி யென்றுனை
விரும்பிய மனைவியை வெறுத்திட் டேகுதல்
கரும்புவேம் பாயதோர் கணக்குப் போலுமால்
இரும்பிய னெஞ்சினா யிதுநன் காவதோ.
7
   
  இத்தலத் துரிமையா வையுமி கந்துசென்
றத்தலத் தழிவில்பே றடைவ னென்றியால்
கைத்தலத் தரும்பொருள் கழிய வீசிடும்
பித்தரோ தனக்கொடி பிறங்க வாழுவார்.
8